பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2013

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா?

முஸ்லிம்களுக்கு எதிராக மதத்துக்கு எதிராக பௌத்த இனவாத காடையர் குழுக்கள் தாக்குதலை மேற்கொள்கின்றபோது அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து சுகபோகங்களை அனுபவிப்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா? இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இந்தத் தாக்குதலை அரசின் அனுமதியுடன் பௌத்த இனவாத காடையர் குழுவே நடத்தியது என்றும் தெரிவித்தார். அரசின் இத்தகைய அராஜகங்களைத் தடுத்துநிறுத்த தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு போராட முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச தரப்பும் அதன் காடையர் குழுவும் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகத்தான் கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது அரசின் மறைமுக அனுமதியுடன் அராஜகங்கள் தொடர்கின்றன.ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அரசுடன் சேர்ந்திருக்கின்றார்கள். எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களும் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.