பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2013

போர்த்தடயங்கள் அழிப்பு முள்ளிவாய்க்காலில் அரங்கேறுகிறது!

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் (நவநீதம் பிள்ளை) வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இராணுவத்தினர் போன்று உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக் கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது.இவற்றி பெரும் பகுதி திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் போன்று தோற்றமளித்தவர்களே ஈடுபட்டனர்'' என்று மக்கள் தெரிவித்தனர்.இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம்,சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன. இவை வெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர்.இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வருகை தரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 27 ஆம் திகதி வடக்குக்கான தனது பயணத்தை ஆரம்பிப்பார். முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.தனது பயணக் காலத்தில் பெரும் பகுதியை அவர் வடக்கிலேயே செலவிடுவார் என்று அரசு கூறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.