பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2013

தீவகத்தில் சுவரொட்டி ஒட்டுகிறது படைத்தரப்பு!

யாழ்.மாவட்டத்தில்; வடக்கு மாகணசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஆளும் தரப்பினை சேர்ந்தவர்களை வெற்றி பெறச்செய்ய கிழக்கிலிருந்து ஒரு தொகுதி போராளிகள் தருவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரியாலையிலுள்ள இராணுவ முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களே அண்மையில் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்திக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுத்தப்பட்டுமிருந்தனர். இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களை வெற்றியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் இராணுவமும் முன்னெடுத்துவருகின்றது. வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ், உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலமையகம் தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளது. இவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளிலும் இராணுவம் கடும் முனைப்புடன் செயற்படுகின்றது. குறிப்பாக தீவுப்பகுதியில் றெமீடியஸின், விளம்பர சுவரொட்டிகளை சிவில் உடையில் இராணுவத்தினரே ஒட்டி வருவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது. மேலும் வீதிகள் முழுவதும் குறித்த வேட்பாளரின் பெயரை நள்ளிரவு 12மணி முதல் அதிகாலை வரை இராணுவமே எழுதி வருகின்றது. இதனை பலர் அவதானித்திருக்கின்றனர். இதனைவிட றெமீடியஸிற்கு வாக்களிக்குமாறு சகல முன்னாள் போராளிகளுக்கும் படைமுகாம்களிற்கு அழைக்கப்பட்டு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிழக்கிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள போராளிகள் தேர்தல் முடியும் வரை தம்மை வீடு திரும்ப படையினர் அனுமதிக்கப் போவதில்லையென கூறியிருப்பதாக தத்தம் குடும்பங்களிற்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.