பக்கங்கள்

17 பிப்ரவரி 2012

ராஜீவ் காந்தி கொலைக்கு அமெரிக்காவே காரணமாக இருக்கலாம் என்கிறார் விமல்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் அமெரிக்காவிற்கு தொடர்பு இருப்பதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவின் திட்டத்தின் பிரகாரம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். பிராபகரன், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் இயக்கத்திற்கு ஏற்படக் கூடிய பாரிய பாதக நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஆளுமை செலுத்த முடியாது என்பதனை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததாக விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தமிழகத்தின் சிறிபெரம்பத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி,தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.