பக்கங்கள்

18 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு பிரித்தானியா காலக்கெடு!

போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதன் முன்னேற்றத்தை காண்பிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பிரித்தானியா காலக்கெடு ஒன்றை வழங்கியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போரின்போது இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய வெளிவிவகாரச் செயலகம் தவறி விட்டதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ கடந்த வாரஇறுதியில் வழங்கியுள்ள பதிலிலேயே சிறிலங்கா அரசுக்கு காலக்கெடு விதித்துள்ள விபரத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னேற்றத்தைக் காண்பிக்க சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு இறுதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அல்லது சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்றும் வில்லியம் ஹக்யூ மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்கள் மீறப்பட்ட மோசமான குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.