பக்கங்கள்

26 டிசம்பர் 2010

தனி ஈழத்தை வென்றே தீருவோம்!-செந்தமிழன் சீமான்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சீமான் தெரிவித்தார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழன் சீமான் பேசியதாவது:
மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வர போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர்.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பது போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னார் எம்.ஜி.ஆர்.
ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போல உதவி செய்த தலைவர்கள் யாரும் கிடையாது.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.
1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னை சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.
அதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
தனி ஈழத்தை வென்றே தீருவோம்.
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.
இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்த தொடங்கி உள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா?
நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள், சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.
பிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்திய பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்'' இவ்வாறு சீமான் பேசினார்.
இக் கூட்டத்தில் புகழேந்தி தங்கராஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோட்டை குமார், சாகுல் அமீது, இயக்குனர் செல்வபாரதி, ராஜீவ்காந்தி, ஆ.சி.ராசா, அமுதா நம்பி, ரேவதி நாகராஜன், வக்கீல் கயல்விழி, அன்புத்தென்னரசன் உட்பட பலர் பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராசு, அதியமான், அமுதாநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.