பக்கங்கள்

24 டிசம்பர் 2010

யாழில் நகைக்கடை உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாண நகைக்கடை உரிமையாளர்களுக்கும் இலங்கை காவற்துறையினருக்கும் இடையிலான நீண்டகால முறுகல் நிலை இன்று முற்றியது. இதனால் இன்றைய தினம் யாழ் நகரிலுள்ள கணிசமான நகைக்கடைகள் தமது வர்த்தக நிலையங்களை மூடி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் விசேட காவற்துறைப் பிரிவொன்று கொள்ளையர்களிடம் இருந்து நகைகளைக் கொள்வனவு செய்ததாக, 3 நகைக்கடை வர்த்தகர்களை இன்று கைது செய்தது. இந்தக் கைது அடாத்தாக இடம்பெற்றதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் கைதின் போது கொள்ளையர் ஒருவர் அழைத்து வரப்பட்டு இந்த நகைகள் யாழ்ப்பாண நகைக்கடை உரிமையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டதாக காவற்துறை குற்றம் சாட்டியது. எனினும் தாங்கள் இந்த நகைகளைக் கொள்வனவு செய்யும் போது வழமையான நடைமுறைகளின் கீழேயே இந்தக் கொள்வனவைச் செய்திருந்ததாகவும் உரிய ஆளடையாள அட்டை விபரங்கள் பெறப்பட்டிருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையர்கள் மூவரில் ஒருவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக நகைகளை விற்றதாகக் கூறப்படுகின்ற நபர் கூட கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காவற்துறையினர் அடாத்தாக நடந்ததாக கூறி ஏற்கனவே நீண்டகாலமாக காவற்துறைத்தரப்பு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கெடுபிடிகளைக் காட்டி வருவதாகவும் அவர்களுக்கான கப்பம் பெறும் நடவடிக்கைகளில் காவற்துறையினர் பின்னணியில் நின்று செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகைக்கடை வர்த்தகர்களை இலக்கு வைத்து காவற்துறைத் தரப்பு தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற கெடுபிடிகள் மற்றும் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் காவற்துறைத்தரப்பின் செயற்பாடுகளைக் கண்டித்தே திடீரென இன்று அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமது வர்த்தக் நிலையங்களை பகிஸ்கரிப்பிற்காக பூட்டி வைத்தனர். இது தொடர்பன ஊடகவிலாளர் மகாநாடொன்று யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. இன ரீதியாக காவற்துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே என்றுமே உறவுகள் ஏற்படச் சாத்தியம் இல்லை என வணிகர் கழகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காவற்துறை அதிகாரிகளுடன் வணிகர்கழக பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தினர். இதனையடுத்து காவற்துறை வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து மதியத்துடன் போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்ட போதிலும் குழப்பமான சூழலே வணிகர்களிடையே காணப்படுகின்றது. ஏற்கனவே வணிகர்கள் கொழும்பிலிருந்து குற்றத்தடுப்பு காவற்துறையினரால் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.