பக்கங்கள்

31 டிசம்பர் 2010

இலங்கையை ஐ.நா.விசாரணை செய்யவேண்டும்!

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட த பொஸ்ரன் குளோப் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்களால் உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே உள்ளார். 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் தேவை என்ற கோரிக்கைகளை அவர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றார்.
இச்சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் இரகசிய தகவல் பரிமாற்றமும், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு போன்றவற்றின் கருத்துகளும் முக்கியமானவை. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மூன்று மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
தனது படையினரும் படை உயர் அதிகாரிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை சொந்த அரசே விசாரணை செய்வது எங்கும் நிகழாதது என அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படட்ட மனித உரிமை மீறல்களில் படை அதிகாரிகளும், அரச அதிகாரிகளும் குற்றவாளிகள் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வும் அவரின் சகோதரர்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரின் இறுதி நாட்களில் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்டுச் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை காணொளிகளும், தப்பியவர்களின் சாட்சியங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும் இலங்கையின் அயல்நாடுகளான இந்தியா, சீனா போன்றன இந்த குற்றங்களுக்காக இலங்கை அரசு தண்டிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவின் இந்தத் தகவல் திரட்டலின் நோக்கம் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டு வருவதே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.