பக்கங்கள்

02 ஆகஸ்ட் 2014

´இறந்தாலும் தமிழீழ கோரிக்கையை கைவிடப்போவதில்லை´நத்வார்ட்சிங்கிடம் தலைவர்!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறும் தாம் அவரை யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இந்தக்கோரிக்கை 1986 ஆம் ஆண்டு விடுக்கப்பட்டதாக இந்திய செய்திசேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் எழுதி வெளியிடவுள்ள “வன் லைப் இஸ் நொட் இன்ப்” என்ற நூலில் 1986 ஆம் ஆண்டு பெங்களுரில் வைத்து சார்க் மாநாட்டின்போது இந்தக்கோரிக்கையை ஜே ஆர், ராஜீவிடம் விடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களுர் மாநாட்டின் போது பிரபாகரனை ஜெயவர்த்தனவுடன் சந்திக்க வைத்து இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக பிரபாகரனை பெங்களுருக்கு வருமாறு புதுடில்லி கேட்டுக்கொண்டது. இதன்போது பிரபாகரனின் பெங்களுர் வருகையை தாம் இரகசியமாக வைத்திருந்தபோதும் எப்படியோ ஜே ஆர் ஜெயவர்த்தன அதனை தெரிந்துக்கொண்டார், இதன்போதே தமிழரான அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தமைக்காக பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறும் அவரை தாம் யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிடப்போவதாகவும் ஜே ஆர், ராஜீவிடம் கோரியதாக நட்வர்சிங் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின்போது முக்கிய பங்கை ஆற்றிய நட்வர்சிங், பிரபாகரனுடன் தாம் பேசியமையானது சவால்மிக்க அனுபவமாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது இந்திய இலங்கை இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று பிரபாகரனிடம் தாம் தெரிவித்தாக நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதனை கண்டு பாவனை எதனையும் வெளிப்படுத்தாத பிரபாகரன், தாம் இறந்தாலும் தமிழீழ கொள்கையை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்ததாக நட்வர்சிங் தெரிவித்துள்ளார். இதன்போது தாம் பிரபாகரனின் திடசங்கற்பத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டதை உணர்ந்ததாக நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பஞ்சாப் மற்றும் அஸாம் பிரச்சினைகளை தீர்த்தமை காரணமாக ஏற்பட்ட நம்பிக்கை காரணமாகவே இலங்கை பிரச்சினையையும் தீர்த்துவிடலாம் என்று ராஜீவ் காந்தி எண்ணியதாக சிங் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும் ராஜீவ் காந்தி இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் பரீட்சியமானவர் அல்ல என்றும் நட்வர்சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.