பக்கங்கள்

20 ஆகஸ்ட் 2014

கோமாளியின் பேச்சை நாம் கேட்கும் அவசியம் இல்லை!

சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியலின் கோமாளி. அவர் சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும், இலங்கை அரசு என்ன செய்யவேண்டும் என்பதை சுப்பிரமணிய சுவாமி தீர்மானிக்க முடியாது. அவர் ஒரு வெளியாள். அவர் இந்திய அரசியலில் ஒரு கோமாளி. இதனால் அவர் சொல்வதையெல்லாம் முக்கியமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு 21ஆம் திகதி புதுடில்லி பயணமாகிறது, புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் இடம்பெறவுள்ள இந்த சந்திப்புகளின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம். இந்திய பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க நாம் எண்ணியுள்ளோம். இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தம் குறித்து உறுதியாகவுள்ளதால் அதனை நடைமுறைப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.