பக்கங்கள்

18 ஆகஸ்ட் 2014

இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ..நா.விசாரிக்கவேண்டும்!

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றனவா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். 33 உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- தமிழ் மக்கள் தாங்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் உட்படுத்தப்படுகின்றனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். இறுதிப்போரில், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர், அவர்களது வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன, அவர்களது யாழ். நூலகம் அழிக்கப்பட்டது இவை எல்லாம் நடந்து முடிந்தவை. இப்போதும்கடத்தல்கள், காணாமற்போகச்செய்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற எல்லா அடக்குமுறைகளும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றஙகள் இடம்பெற்றுள்ளன. இப்போதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் சொந்த இடத்தில் மீளக்குடியேற முடியாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் வசிக்கின்றனர். இந்த விடையங்கள் அனைத்தையும் ஐ.நா. மனிஉரிமைகள் விசாரணைக்குழு கருத்தில் கொள்ளவேண்டும். 1974 முதல், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஐ.நா. சபை ஆராய வேண்டும். 1970, 1980, 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசு எந்த உண்மைகளையும் வெளியிடவில்லை. உள்ளூர் பொறிமுறையான நல்லிணக்க ஆணைக்குழுவும் ஆராயவில்லை. சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வருவதற்க அரசு அனுமதியளிக்க மறுத்தால் தமிழ்நாட்டில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.- இந்த மாதம் பதவியில் இருந்து விலகும் தாங்கள் உலகில் மனித உரிமையை நிலை நாட்டுவதற்காக மிகவும் திறமையாகச் செயற்பட்டுள்ளீர்கள். அந்தச் சேவைக்கும் பணிக்கும் எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். - என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராஜா, அன்ரனி ஜெனநாதன், த.சித்தார்த்தன், அனந்தி சசிதரன், ப.அரியரத்தினம், கா.கிருஷ்ணபிள்ளை, கு.நாகேஸ்வரன், இரா.துரைரெத்தினம் உள்ளிட்ட வடக்கு,கிழக்கு மாகாண சபைகளின் 33 உறுப்பினர்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.