பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2014

நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும்போது..?

நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்க
முடியாது? என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பிய சுவாரசியமான சம்பவம் குறித்த தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டார் ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி. நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அதாவது, கடல்சார் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்துள்ளார். அவருடன் நீதியமைச்சர் ஹக்கீமே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். இதன்போது, குறித்த அமைச்சரிடம் எமது நீதிஅமைச்சர் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். "சுவிட்சர்லாந்தில் கடல் வளம் இல்லை. எனவே, எதற்காக கடல்சார்உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு பதில் வழங்கிய சுவிட்சர்லாந்து அமைச்சர், "நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்கு முடியாது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்று ரங்கா எம்.பி. குறிப்பிட்டார். அதேவேளை, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ரங்கா எம்.பி., "இலத்திரனியல்அடையாள அட்டைக்கு தனிப்பட்ட விவரங்கள் கோரப் பட்டுள்ளன. இவ்வாறு தனிப்பட்ட விவரங்கள் கோரப்படுவது தமிழர்களுக்கு புதுமையான விடயமல்ல. முன்னர் வடக்கு, கிழக்கில் இருந்த நடைமுறை இன்று தெற்குவரை வியாபித்துள்ளது. நாட்டில் தகவல் அறியும் சட்டம் இல்லை. தரவுகளை பாதுகாப்பது சம்பந்தமான சட்ட ஏற்பாடும் இல்லை. இந்நிலையில் எவ்வாறு தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க முடியும். தகவல்கள் கசியுமானால் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவ்வாறு சட்டத்தின் நிவாரணத்தைப் பெறுவது? எனவே, சட்டத்துக்கு புறம்பான வகையில் இலத்திரனியல் அட்டைக்குரிய விண்ணப்பங்களை விநியோகிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.