பக்கங்கள்

23 அக்டோபர் 2012

இளையராஜாவின் இசை நிகழ்வை புறக்கணிக்குமாறு கனடா தமிழர்கள் வேண்டுகோள்!

கனடாவில் இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனடா தமிழர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்று வதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான். எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.