பக்கங்கள்

03 அக்டோபர் 2012

ஆதரவாக வாக்களித்த மாகாண சபை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!- நிசாம் காரியப்பர்

'தலைவர் சொல்லாதபோதிலும், தலைவர் நாட்டிலில்லாத சூழ்நிலையிலும், செயலாளர் நாயகத்தின் அங்கீகாரமின்றியும் கிழக்கு மாகாணசபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 'திவிநெகும' சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததன் மர்மம்தான் என்ன?' என கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வாக்களிக்க கால அவகாசம் கோரப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுத்திருந்த நிலையில், இந்த முடிவுக்கு மாறாகக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நடந்துகொண்டமையானது பாரிய துரோகமும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயற்பாடாகவுமே உள்ளது என்றும் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: மு.கா. செயலாளர் நாயகம் ஹஸனலியிடம் இச்சட்டமூலம் தொடர்பில் நாம் வினவினோம். 'கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. தலைவர் நாடு திரும்பியவுடன் உயர்பீடத்தைக் கூட்டி முடிவெடுக்கும்வரை இச்சட்டமூலம் தொடர்பில் வாக்களிக்க காலஅவகாசம் கோருமாறு நான் கிழக்கு மாகாணசபை மு.கா. குழுத் தலைவர் ஜெமிலிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்' என்று எமக்குப் பதிலளித்தார். ஆனால், கிழக்கு மாகாண அமைச்சரவையிலுள்ள எமது கட்சியின் இரு அமைச்சர்களும் அமைச்சரவையிலும் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். செயலாளர் நாயகத்தின் வேண்டுகோளாகவிருந்த 'காலஅவகாசம் கோரல்' என்ற விடயத்தை இவர்கள் முற்றாகப் புறக்கணித்து கட்சி விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டிருப்பதன் பின்னணியும், மர்மமும்தான் என்ன? கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக நடந்துகொண்ட இந்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கட்சியின் வேண்டுகோளைப் புறக்கணித்து 'திவிநெகும' சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததற்கான காரணத்தை இவர்களிடமிருந்து எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியவுடன் அவசரமாக உயர்பீடத்தைக் கூட்டி இது குறித்து ஆராயவேண்டும். அதியுயர்பீடத்தையும் மீறிய இவர்களின் செயற்பாடு பெரும் அதிர்ச்சியை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என மு.காவின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.