பக்கங்கள்

29 அக்டோபர் 2012

புலிகளை அழிக்க வஞ்சகம் செய்தவரே சொல்ஹய்ம்; விடுதலைப் புலிகள் அறிக்கை

விடுதலைப்புலிகளின் தனித்துவத்தையும் சுயத்தையும் அழிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் போரின் உச்சக்கட்டத்தில் புலிகளின் மீது எரிக்சொல் ஹெய்ம் உட்பட்ட பன்னாட்டுச் சக்திகளால் வஞ்சக வலை விரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது. இணையத் தளங்களில் நேற்று வெளியான இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: புலிகளுக்கும் அரசுக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் பி.பி.ஸி. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும். அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண் பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார். வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து எமது மக்கள் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டும், பட்டினிச்சாவை எதிர்கொண்டும், சுகாதார, மருத்துவவசதிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாம் மூன்றாந்தரப்பு ஒன்றிடம் எமது மக்களைக் கையளிக்க முன்வந்திருந்தோம். அதேநேரம் உடனடி போர்நிறுத்தத்தையும் வேண்டி நின்றோம். அதை தொடர்புடையவர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். இதேவேளை, எமது அமைப்பின் தலைமையையும் போராளிகளையும் சரணடையும்படி தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்ததுடன் அதற்குரிய திட்டங்களையும் வகுத்து இயக்கத் தலைமையினதும் போராளிகளினதும் சரணடைவையே முக்கியத்துவப்படுத்தி நடுநிலையாளர்களும் பன்னாட்டுச் சமூகமும் செயற்பட்டு வந்தது. மாறாக, நாம் எமது மக்களை மூன்றாந்தரப்பு ஒன்று பாதுகாப்பாகப் பொறுப்பெடுக்க வேண்டுமெனவும் அதற்குரிய உத்தரவாதத்தை எழுத்து மூலம் தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தோம். எமக்குரிய அந்த பாதுகாப்பு உத்தரவாதம் நோர்வேயாலோ ஏனையவர்களாலோ தரப்படவேயில்லை. சரணடைவு பற்றிய திட்டங்களே தொடர்ந்தும் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. எமது போராட்ட மரபு வித்தியாசமானது, உலகில் தனித்துவமான நெறிகளையும் நடைமுறைகளையும் கொண்டது. மிக இறுக்கமாகப் பேணிவந்த அந்தத் தனித்துவங்களும் இராணுவ ஒழுக்கங்களுமே எமது இயக்கத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் வளர்த்தும் பாதுகாத்தும் வந்தன. அப்படிப்பட்ட எமது இயக்கத்தின் தனித்துவத்தையும் சுயத்தையும் அழிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவுமே போரின் உச்சக்கட்டத்தில் எமது அமைப்பின் மீது எரிக் சொல்ஹெய்ம் உட்பட்ட பன்னாட்டுச் சக்திகளால் வஞ்சக வலை விரிக்கப்பட்டது. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக கழுத்தில் நஞ்சுகட்டும் நடைமுறையை உருவாக்கிப் பேணிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பை ஒட்டுமொத்தமாகச் சரணடையும்படி ஒரு திட்டத்தை முன்வைக்க இவர்கள் முண்டியடித்தார்கள். எதிரியின் கோட்டைக்குள் நின்றே தலைகுனியாமல் எதிர்த்து நின்ற எமது தலைமையை, அன்னியரின் மிரட்டல்களுக்கெல்லாம் சளைக்காமல் எதிர்த்து நின்று போராட்டத்தை வளர்த்த எமது தலைமையை, தனது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்று வழிகாட்டியாய் வாழ்ந்து வந்த எமது தலைமையை எதிரிகளிடம் மண்டியிடும்படி ஒரு திட்டத்தை முன்வைக்க இந்த நடுநிலையாளர்களால் முடிந்ததென்றால், எமது இனப்பிரச்சனையைத் தீர்க்க இவர்கள் எவ்வளவு இதய சுத்தியோடு செயற்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எரிக் சொல்ஹெய்மும் நோர்வேயும் நடுநிலையாளராகச் செயற்படவெனப் புறப்பட்டது எமது இனப்பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்துக்காகவே. தமிழ்மக்கள் மேலான கொடிய போரை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் விடுதலைப்போரைத் தலைமைதாங்கி நடாத்திய அமைப்பை அதன் தலைமையுட்பட சரணடையும்படி கேட்பதென்பது, நிகழ்காலத்தில் மட்டுமன்றி எதிர்காலத்திற்கூட அந்த விடுதலைப் போராட்டத்தைப் பூண்டோடு அழிக்கும் செயலாகும். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை என்றுமே மீளெழமுடியா நிலைக்கு இட்டுச்செல்ல சிங்களப் பேரினவாதம் முயன்றதற்கு ஒப்பான செயலே இந்த நடுநிலையாளர்களும் பன்னாட்டுச் சமூகமும் இறுதிப்போரின்போது நடந்துகொண்ட முறையுமாகும். நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்ட போரில் எமது மக்களைப் பாதுகாக்க, போரை நிறுத்துவதே நடுநிலையாளராகச் செயற்பட்டவர்களின் கடமையாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதுவும் நடுநிலையாளரின் அனுசரணையோடு செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இறுதிவரை வெளிவராமல் அமைதி காத்த தரப்பை அழுத்தி, ஒட்டுமொத்தச் சரணாகதியூடாக விடுதலைப்போராட்டத்தையே மழுங்கடிக்கும் பணியாக இருந்திருக்கக் கூடாது. வருந்தத்தக்க முறையில் எரிக்சொல்கெய்மும் நடுநிலையாளர்களும் ஈழப்போராட்டத்தை ஒட்டுமொத்த அழிவுக்குக் கொண்டுசெல்லும் முனைப்போடு செயற்பட்டது மட்டுமன்றி, இன்று எமது தலைமைமீதே பழியைச் சுமத்தி தமது கைகளிலிருக்கும் இரத்தக்கறையை மறைக்க முற்படுகின்றார்கள். எமது அமைப்பின்மீதும் தலைமைமீதும் அபாண்டமான பழியைச் சுமத்துவதைக் கடுமையாகக் கண்டிப்பதோடு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இனியாவது மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.