பக்கங்கள்

30 அக்டோபர் 2012

"நீங்கள் இங்க இருங்களன்; நானும் வாறன் கெதியா" 6 பிள்ளைகளின் தாயாரின் கண்ணீர் கதை!

இருப்பதற்கு ஓர் இடம் இல்லாமலும் பராமரிப்பதற்குப் பெற்ற பிள்ளைகள் முன்வராமையாலும் தனது நோய்வாய்ப்பட்ட கணவனை கைதடி வயோதிபர் இல்லத்தில் இணைத்தார் வயோதிப மனைவி. இப்படி ஒரு பரிதாபச் சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது: யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கணவரான ஜோண் திரவியத்துக்கு வயது 83. மனைவி திரவியம் இராசாத்தியம்மாவுக்கு வயது 75 இவர்களுக்கு 6 பிள்ளைகள் தம்மைப் பராமரிப்பதற்குத் தமது பிள்ளைகள் முன்வராமையால் வயது முதிர்ந்த நேரத்தில் தமது வாழ்க்கையை நடத்திச்செல்வதில் பெரும் சிரமப்பட்டனர். இவர்களுக்குத் தங்கியிருப்பதற்கு இருப்பிடமும் இருக்கவில்லை. இதனால் பெரிதும் அந்தரித்த நிலையில் இருந்து வந்தனர். சுகயீனமடைந்துள்ள தனது கணவரைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு முடியாமல் போனமையால் அவர் தனது கணவரையும் அழைத்துக் கொண்டு நேராகக் கைதடி அரச முதியோர் இல்லத்துக்குச் சென்றார். தானும் நோய்வாய்ப் பட்டுள்ள நிலையில் தனது கணவரைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளதாகவும், பிள்ளைகளும் தம்மைப் பராமரிக்க முன் வராமை காரணமாகத் தாங்கள் பெரிதும் துன்பப்படுவதாகவும் தெரிவித்த அந்த வயோதிபப்பெண் இல்ல அத்தியட்சகர் முன்பாக விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவர்களின் நிலையைக் கண்டு கொண்ட இல்லத்தின் அத்தியட்சகர் என்.கிருபாகரன் அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வயது முதிர்ந்த கணவனான திரவியத்தை முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொண்டார். தனது கணவனை ஒரு இடத்தில் ஒப்படைத்து விட்ட மனத்திருப்தியுடன் முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது, எனது கணவரை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். நான் எங்கேயாவது இருந்து வாழ்கிறேன். அடிக்கடி அவரை வந்து பார்த்துச் செல்வேன் யாரும் இல்லாவிட்டால் நானும் இங்கு வருகிறேன். என அழுதழுது கூறி விட்டுச் சென்றதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்த மாத முற்பகுதியில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகளின் போது பெற்றோரைப் பிள்ளைகள் அன்பு, ஆதரவுடன் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றமை மனவேதனை அளிப்பதாக இல்ல அத்தியட்சகர் மேலும் கூறினார். பிள்ளைகள் தமது பெற்றோரை இப்படி அநாதரவாக விட்டுச் செல்லும் நிலை எமது சமூகத்தில் அதிகரித்து வருவதாகவும் இந்த நிலையை மாற்றுவதற்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தப் பெற்றோரைக் கைவிட்டுள்ள 6 பிள்ளைகளும் வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசிப்பதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பாருங்கள் இந்தப் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.