பக்கங்கள்

29 அக்டோபர் 2012

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!

மட்டக்களப்பில் தமிழரான காவற்றுறை அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பிக்கு ஒருவர், அவ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு - மங்கலராமய விகாரைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, மட்டக்களப்பு நகரில் உள்ள மங்கலராமய விகாரைக்கு அருகில் தமிழ் மொழி பேசும் காவற்றுறை அதிகாரி ஒருவர் குடியிருந்து வருகிறார். குறித்த அதிகாரியும் அவரது மனைவியும் காவற்றுறை உப பரிசோதகராகக் கடமையாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மங்கலராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர், குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மதில்களை அகற்றக்கோரியும் வீட்டை உடைக்ககோரியும் பல்வேறு தடவைகள் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார். இந் நிலையில் நேற்று மாலை பிக்குவின் தலைமையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற சுமார் 06 பேர் கொண்ட குழுவினர் காவற்றுறை அதிகாரி வீட்டின் மதில், குளியல் அறை மற்றும் சமையலறைப் பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் குடும்பத்தினரையும் தாக்கமுற்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த அதிகாரி, காவற்றுறையினரின் அவசர சேவைப்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆயினும் காவற்றுறையினர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் உடனடியாக அருகில் உள்ள மட்டக்களப்பு காவற்றுறையினரிடம் சென்று முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு குறித்த அதிகாரி கோரியுள்ளார். எனினும் உயரதிகாரி இல்லையென குறித்த முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாத, அந்த அதிகாரி மட்டக்களப்பு மாவட்ட காவற்றுறை மா அதிபரின் வீட்டுக்கு சென்று முறையிடச் சென்றவேளை, அங்கு கடமையில் இருந்த காவற்றுறையினர் குறித்த அதிகாரி இல்லையென கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதவானிடம் சென்று தனது நிலைமை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த காவற்றுறை அதிகாரி பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.