பக்கங்கள்

01 டிசம்பர் 2013

ஐ.நா.பிரதிநிதி இலங்கைக்குள் நுழைய அனுமதி!

சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்துள்ள இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு இணங்கியுள்ளது. இதனையடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நாளை திங்கட்கிழமை 02.11.13) இலங்கை செல்கிறார். அவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கை அரசு, ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும், மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்கமாட்டோம் என்றும் கூறிச் சர்வதேச அழுத்தத்தை நிராகரித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச விசாரணைக்கான காலக்கடுவை பிரிட்டன் நிர்ணயித்துள்ள வேளையில் சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்து ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசு இணங்கியுள்ளது. நாளை திங்கட்கிழமை இலங்கை செல்லும் ஐ.நா அதிகாரி பெயானி, மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோரை அவர் சந்திப்பதுடன், வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்கும் செல்வார். இதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர், அங்கு அரச அதிபரையும், இராணுவத் தளபதியையும் சந்தித்துக் கலந்துரையாடுவார். கொழும்பில் இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். இவரது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.