பக்கங்கள்

26 டிசம்பர் 2013

இன அழிப்பு அரசினது புலிப் பூச்சாண்டி!

pathu1லங்காநியூஸ் இணையம் அண்மையில் பரப்பிய ஒரு செய்தியை ஆளாளுக்கு தமது வசதிக்கேற்ப திரித்துக்கொண்டிருக்கும் சூழலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் தன் பங்கிற்கு திரித்திருக்கிறார். அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை கொண்டு புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் தம்போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்றும் கூறியிருக்கிறார். நல்ல விடயம். இப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். தமது உயிருக்கு ஆபத்து என்றவுடன் அந்த செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கூட உறுதிப்படுத்தாமல் தமது பதவிநிலைகளையும் மறந்து பகிரங்கமாக பேசும் இவர் போன்றவர்கள் மக்கள் பிரச்சினையில் தலைக்குமேல் வெள்ளம் போன பின்பும் காக்கும் மவுனத்தையும் கலைத்து கொண்டால் நல்லது. லங்காநியூஸ் இணையமும்சரி அதைக் காவுபர்களும்சரி தற்போது விக்கினேஸ்வரனும் கூட ஒரு தவறான புரிதலை தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்து உருவாக்க முற்படுகிறார்கள். சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கும் கொலைக்கும்பலுக்கு ஏன் விடுதலைப்புலிகள் என்று பெயரிடுகிறார்கள்? இன விடுதலைக்காக எந்த சமரசமுமின்றி கடைசிவரை போராடி மடிந்தவர்கள் புலிகள். முள்ளிவாய்க்காலில் வைத்து அடுத்து வரும் தலைமுறைக்கு ஒரு தெளிவான வரலாற்றை விட்டு சென்றிருக்கிறார்கள். மாண்டவர்கள் போக சிறைப்பிடித்த போராளிகளில் சிலரை தமது தேவைக்கு சிங்களம் பயன்படுத்துவதையும் நாம் அறிவோம். கொடும் சித்திரவதைகளினாலும் தமது குடும்பத்தினரின் உயிர்களை பணயமாக வைத்து செய்யும் அச்சுறுத்தல்களினாலும் சில போராளிகள் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலின்படி இயங்கவேண்டிய கட்டாயம். இருந்தும் இதுவரை அப்படியான எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மே 18 இற்கு பிறகு கேணல் ராம் போன்றவர்களை வைத்து தொடங்கப்பட்ட நாடகம் தற்போது கேணல் பதுமனில் வந்து நிற்கிறது. இடையில் வெளியாக தெரிந்தும் தெரியாமலும் பலர் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் வந்தார்கள். ஆனால் போராட்டம் குறித்த தெளிவான புரிதலும் அறிதலும் உள்ள மக்கள் தொகுதிக்குள் இந்த நிகழச்சிநிரல் செயல்திறனற்று போனதே யதார்த்தம். இப்போது கேணல் பதுமன் விடயம்கூட ஒரு ஊகம்தான். அது உண்மையாயினும் முன்னைய நிகழ்வுகளைப்போல் செயலிழக்குமே தவிர துளியளவும் சாத்தியமில்லை. ஒரு வேளை அப்படி ஒரு ஆயுதஅணி உருவானால்கூட அதற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்? அது சிறீலங்கா துணை இராணுவக்குழு அல்லது ஒட்டுக்குழுவே. இதற்கு ஏன் புலிகளின் பெயரை பாவிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கேள்வி? புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துபோன கருணாவை நமது மக்கள் ‘கருணா ஒட்டுக்குழு’ என்றுதான் விளித்தார்களே ஒழிய ‘புலிகள்’ என்று ஒருபோதும் அழைக்கவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புலிகள் தவிர ஏனைய குழுக்கள் அனைத்தும் வேறுபாடுகளின்றி ஏதோ ஒரு கட்டத்தில் தமது கொள்கைகளிலிருந்து விலகி சிறீலங்கா மற்றும் இந்திய இராணுவ சீருடையை தரித்தவையே.! புலிகள் எந்த தருணத்திலும் அத்தகைய ஒரு நிலை எடுத்ததில்லை. மே 18 இற்கு பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளின் தலைமைப்பொறுப்பை ‘கைப்பற்ற’ முற்பட்ட கேபியை ‘கேபி குழு’ என்று மக்கள் விளித்தார்களே ஒழிய புலிகளின் ஒரு அங்கமாக பார்க்கவில்லை. மக்களின் கணிப்பை கேபி பொய்யாக்கவில்லை. தனது துரோகத்தை தினமும் அம்பலப்படுத்தியபடி சிறீலங்காவின் செல்லப்பிள்ளையாக அவர் இன்று வலம்வருகிறார். கேணல் ராமை கொண்டு மாவீரர் அறிக்கைவிடுவித்த சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலையும் பெரும் இக்கட்டான புறயதார்த்த நிலையில் நின்றபோதும் அம்பலப்படுத்தி தகர்த்தெறிந்த மக்களுக்கு தற்போது பதுமன் விவகாரம் ஒரு பொருட்டேயில்லை. கேணல் ராம் மட்டுமல்ல பதுமன் கூட ஒரு தலைசிறந்த போராளி. அவர் மனமறிந்து விடுதலைப்போராட்டத்திற்கு துரோகம் செய்ய மாட்டார். அதையும் மீறி சிறீலங்கா இராணுவம் அவரை வற்புறுத்தி இயங்க வைத்தால் அது ‘பதுமன் ஒட்டுக்குழுவே’ தவிர அது ‘புலிகள்’ அல்ல. விக்கினேஸ்வரன் மட்டுமல்ல சில ஊடக பொறுக்கிகளும் சிறீலங்கா துணை இராணுவக்குழுக்களை ‘புலிகள்’ என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டால் நல்லது. வரலாற்றை படைக்க முடியாத நீங்கள் வரலாற்றை திரிக்காமலாவது இருக்கலாம். புலிகளுக்கும் எலிகளுக்கும் வேறுபாடு தெரிந்தவர்கள் மக்கள். மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். சில ஊடக பொறுக்கிகளுக்கும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும்தான் புலிக்காய்ச்சல் பிடித்து பிதற்றுகிறார்கள். இவர்கள்தான் சிங்களத்தின் புலிப்பூச்சாண்டி நிகழச்சிநிரலின் காரணகர்த்தாக்கள். ஆயுதப்போராட்டத்திற்கான எந்த தேவையும் இல்லாத களயதார்த்தத்தை உணர்ந்து புலிகள் இராஜதந்திர போராட்டத்தை முன்னெடுத்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் கைகளில் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்போது அதை மக்களே முதலில் அறிவிப்பார்கள். சிங்கள ஆட்சியாளர்களோஇ ஓட்டுப்பொறுக்கிகளோ, ஊடகப்பொறுக்கிகளோ இது குறித்து அறிவிக்கும் இழிநிலையில் தமிழீழ விடுதலைப்போராட்டமும் இல்லை தமிழீழ மக்களும் இல்லை.

ஈழம்ஈநியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.