பக்கங்கள்

18 டிசம்பர் 2013

தண்ணீர் போதாது என்கிறார் சிறீதரன்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டுவருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப்போர் இன்று பகிரங்கமாக மேடை ஒன்றில் வெளிப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி கல்வி வலயம் நடாத்திய ´மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா´ இன்று சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´வடமாகாண முதலமைச்சர் கேட்பது இரணைமடுத் தண்ணீரை அவர் தாகமாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இரணைமடுக் குளம் 34 அடி நீரைக் கொண்டது. ஆனால் மேலதிக இரண்டு அடி நீரைக் கூட்டி அதனைத்தான் தாங்கள் கொண்டு செல்வதாக கொண்டு செல்பவர்கள் சொல்கிறார்கள். கிளிநொச்சியில் 34 ஆயிரம் ஏக்கருக்கு நீர் தேவை இருக்கிறது.ஆனால் எண்ணாயிரம் ஏக்கருக்கு மட்டுமே நீர்பாய்ச்ச முடிகிறது. அந்த எண்ணாயிரம் ஏக்கரை 16 ஆயிரம் ஏக்கராக மாற்ற முடியுமா? என விவசாயிகள் கேட்கிறார்கள். மேலதிக நீர் என்பது 34 ஆயிரம் ஏக்கருக்கு காலபோகம், சிறுபோகம் ஆகியவற்றுக்கு நீர் வழங்கிய பின்னர் இருப்பது. இங்கு மீதம் இல்லை. அவ்வாறு மீதமிருந்தால் கொடுக்கலாம். இரணைமடுக் குளத்தில் தற்போது 34 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 12 அடி தண்ணீர் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்கே இருக்கிறது மேலதிக நீர்´ என கேள்வியும் எழுப்பினார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதற்கு இவ்வாறு பதிலளித்துப் பேசினார். ´செயற்திட்டங்கள் பற்றிப் பேசும்போது உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை. அது உள்ளத்திலிருந்து வரவேண்டும். அறிவு பூர்வமாக இந்தச் செயற்திட்டம் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட விடயத்தை நாங்கள் பேசி ஆராய்ந்த பின்னர்தான் நான் தம்பியிடம், நீங்கள் தண்ணீர் கொண்டு வருவீர்களா? இல்லையா? என்று கேட்டேன். இரணைமடுக் குளத்தில் 12 அடி தண்ணீர் இருந்தால் அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. 32 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும்.´ எனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இந்த நிகழ்விற்கு இவர்களோடு, வடமாகாண விவசாய அமைச்சர், பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை, தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.