பக்கங்கள்

13 டிசம்பர் 2013

மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு தெளிவுகளை அளித்திருக்கிறது!

ஒரு இனப்படுகொலையை மறைத்து அதை போர்க்குற்றம் என்று மட்டும் சுருக்கிப் பேசிவரும் சர்வதேசம், அறிவுசீவி வர்க்கத்தினை புறந்தள்ளி இருக்கிறது. இது 2009க்கு பின்பு நமக்கு கிடைத்த குறிப்பிடத் தக்க வெற்றி. போர்க்குற்றம் என்பதாக மட்டுமே சுருக்கினால் நமது விடுதலை என்பது எட்டாக்கனியாக மாறும் என்பதை 2011இல் ஐ.நா அறிக்கை வெளியான உடனேயே முன்வைத்தோம்.. போர்க்குற்றம் என்கிற பதத்தினை ஏற்க முடியாது என்று பேசிய பொழுது மே17 இயக்கத்தினை தனிமைப்படுத்தும் செயல் வெகுவேகமாகவே நடந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் உலகின் மிக முக்கிய மனித உரிமையாளார்கள், சிந்தனையாளார்கள், செயல்பாட்டாளர்கள் என பல்வேறு நாடுகளில் இருந்து நீதிபதிகளாக வந்தவர்கள் ஆழமாக ஆராய்ந்த பின்னர் இதை ’இனப்படுகொலை’ என அறிவித்திருக்கிறார்கள். இது முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்கது. அரசாங்கத்திடம் இருந்து உரிமைகளை மக்களிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இந்த வாதங்களை வைத்து அவர்கள் பேசியது மறக்க இயலாதது. இத்தாலி, ஜெர்மனி, ஆர்ஜண்டீனா, துருக்கி, ஆர்மீனியா, பர்மா எனப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களும், சிங்கள தோழர்களும், இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தமிழீழ அறிஞர்களும், தனிப்பட்ட செயல்பாட்டாளர்களும், தமிழீழத்தில் இருந்து வந்திருந்த களமுனையில் செயல்பட்டவர்களுமாக ஆதாரங்களையும், வாதங்களையும் அடுக்கினார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியாவின் மீதான குற்றச்சாட்டுகளும், வரலாற்று-பொருளாதார-அரசியல் ரீதியான பின்னனிகளும் விரிவாக அலசப்பட்டன. இனப்படுகொலைக்கான சட்டங்கள், அளவுகோள்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை சென்றது. ஆதாரங்கள்-சாட்சியங்கள் என பல்வேறு தகவல்களை மூன்று நாட்களும் இரவு பகல் என ஆராய்ந்தார்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கான முன் தினம் ஆரம்பித்த விவாதம் அதிகாலை 5 மணிவரை நீடித்தது. பின்னர் ஏகமனதாக இனப்படுகொலை என்கிற முடிவிற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வந்து சேர்ந்தார்கள்.. அமெரிக்க -இங்கிலாந்தின் பங்களிப்பினை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தவர்கள், இந்தியாவின் பங்களிப்பு பற்றி சற்று வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் கவனித்தார்கள். நேரடி சாட்சியங்கள், மற்றும் ஆதாரங்களை இனப்படுகொலைக்காகவும், இங்கிலாந்து, அமெரிக்காவிற்காக்வும் ஆய்வினை செய்த கால அளவு இந்தியாவினைப்பற்றிய விவாதத்திற்கு முழுமையாக நீதிபதிகளுக்கு கிடைக்காமல் போயிற்று.. ஆதாரங்களை வரலாற்று ரீதியான பின்னனியில் இருந்து சமீப கால நிகழ்வு வரையில் ஆவணமாக அளித்திருந்தோம்,. இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு என்பதும், இனப்படுகொலைக்கான ஆதரவு என்பதுவும், அதன் இனரீதியான பின்னனியில் இருந்து, சாதிய ரீதியான அர்த்தங்களையும், தனது பிராந்திய நலனுக்கு ஆதரவானதாகவும், தமிழீழ அரசு 2002இல் இருந்து கட்டி எழுப்பிய அரசு வழிமுறை தமக்கு பெரிதும் ஆபத்தானது என்றும் பல்வேறு வாதங்களின் அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்பு ஆவணங்கள் முன்வைத்தோம். இந்த அடிப்படையும் பங்கேற்பிற்கான ஆதாரங்களையும் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் முன்வைத்திருந்தோம். இதனை முழுமையாக ஆராய்வதற்கும், அறிவதற்கும், விவாதிக்கவும் நேரம் போதாமையாக இருந்ததால் உடனடியாக முடிவிற்கு வர இயலாமல் போனது. ஆனால் இந்தியா இனப்படுகொலையில் துணை செய்தத்தற்கான குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை பதிவு செய்தார்கள். இந்தியாவின் பங்களிப்பு என்பது ஒரு அதிர்ச்சியாகவே சர்வதேச அறிஞர்களுக்கு இருந்தது என்பது எங்களுக்கும் ஒரு அதிர்ச்சியே. இந்தியா தனது கோர முகத்தினை மறைத்து செய்து வரும் பிரச்சாரம் உடைபடும் இடமாக தேசிய இனசிக்கலே இருக்கிறது. நீதிபதிகளில் ஒரு சிலரால் இந்தியாவின் சாதிய பிரச்சனையின் பின்புலத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஆளும்வர்க்கத்தின் சாதிய பின்புலம், ஊடகம்-அதிகாரவர்க்கம்-நீதித்துறையின் சாதிய பின்புலம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் தாக்கம் செலுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். ஆனால் பிறருக்கு இது சென்று சேராத விடயமாக இருந்தது. நவநீதம் பிள்ளையின் சாதியத்திற்கு எதிரான ஐ.நா செயல்பாட்டு அறிக்கை அதன் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள வைத்தது. சாதிய ரீதியாக தமிழீழப்படுகொலையில் இந்திய ஆளும்வர்க்கத்தின் பங்கினை எடுத்து முன்வைத்திருந்தோம். இதனை இந்தியாவின் ராணுவ உதவிகள், களமுனை உதவிகள், ராஜ தந்திர ரீதியான உதவிகள், செயல்பாடுகள், ஆயுத உதவிகள், சர்வதேச நிருவனங்களை திசை திருப்புதல்கள், நேரடி பங்களிப்புகள் என பல்வேறு ஆதாரங்களை விரிவாக, ஆழமாக பதிவு செய்திருந்தோம்... இந்த புகைப்படத்தில் இருக்கிற விசாரணைக்குழுவின் தலைவர் திரு. டெனிஸ் ஹாலிடே, ஐ.நாவின் துணை பொதுச்செயலாளார் பொருப்பில் இருந்தவர். ஈராக்கின் மீது பொருளாதார தடை விதித்த பொழுது அதைக் கண்டித்து பதவியை ராஜனிமா செய்தவர். எங்களிடம் இவர் நீண்ட நேரம் இந்தியாவின் பங்களிப்பினைப் பற்றி விரிவாக பேசிக்கொண்டிருந்தார். எளிமையான்வராகவும், மனித நேயம் மிக்கவராகவும், மக்கள் உரிமையை புரிந்து கொள்பவராகவும் நல்ல தோழனாக பழகினார். இந்தியா சென்றதற்கு பின்னரான பாதுகாப்பு பற்றி பேசினார். அதை தாம் கவனிக்கவும் செய்வோம் என்றார். விசாரணை நாட்களில் ஆவணத்தினை ஆராய்ந்தும், சரிபார்த்தும், பிற வழிகளில் தகவல்களை சரிபார்த்தும் நிலைப்பாடு எடுக்கும் பொழுது போராடும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் ஆகச்சிறந்த மனித உரிமை செயல்பாட்டாளார்களே.. சிங்கள தோழர்களின் ஆழமான அர்பணிப்பும், உழைப்பும் ஆச்சரியப்படவும், வெட்கப்படவும் வைத்தது. அவர்களுடைய இதே உழைப்பினை எங்களால் ஏன் மூன்று ஆண்டுகளாக செய்யமுடியவில்லை என்பதே வெட்கப்பட வைக்கிறது. மூன்று வருட உழைப்பு வீண்போகவில்லை என்றாலும் இன்னும் அதிகமாக உழைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... இந்த ஆவணப்படுத்தலில் உழைத்த பல்வேறு தோழர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.