பக்கங்கள்

14 டிசம்பர் 2013

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று!

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்ட பாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார். பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயகத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூழலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவராக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களையே சாரும் . தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலகங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார். ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகட்டத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார். தாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.