பக்கங்கள்

04 டிசம்பர் 2013

வட மாகாண எதிர்க் கட்சித் தலைவராக கே.தவராசா?

வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம் என தெரிய வருகிறது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தொடர்பு பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.12.13) நெடுந்தீவினைச் சேர்ந்த லண்டன் சசிந்திரன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (03.12.13) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர். மூவரும் இன்று (04.12.13) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற சூழலில் இவருக்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாண சபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர் கட்சி தலைவர் என்ற பெயரை அடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் அரசாங்கத்துடன் நெருக்கமாகி இருப்பவருமான அங்கயன் ராமநாதன் மாகாண சபையில் தனது முக்கியத்தையும் முன்னிலைப்படுத்த முனையும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரம் எந்த வகையில் இருக்கும் என்பதனை பொறுத்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.