பக்கங்கள்

08 டிசம்பர் 2013

நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பி.முற்றாக வெளியேற்றம்!

நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலையைத் தொடர்ந்து, அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறினர். அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றத ஈ.பி.டி.பி குழுவின் தலைமையில் இந்த மூடுவிழா நேற்று நடத்தப்பட்டது. அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை தலைவர் என்.ஜெயகாந்தன் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறிய அதே நேரத்தில் தீவகத்தில் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை இழுத்து மூடுவது எனவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சகோதரப் படுகொலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஈடுபட்டதை அடுத்து தீவக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு உணர்வலைகளே ஈ.பி.டி.பியின் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையைக் கண்டித்து வந்த ஈ.பி.டி.பியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் அதே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஈபிடிபியினரை நெடுந்தீவில் இருந்து வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி அங்குள்ள அவர்களது சில ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் எனவும் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.