பக்கங்கள்

05 டிசம்பர் 2013

இலங்கை போர்குற்றம் குறித்து ஜெர்மனியில் விசாரணை!

இலங்கை மீதான போர்குற்றம் பற்றி ஜெர்மனியில் 7-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது. இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் என்ற பெயரில் சிங்கள ராணுவம் தமிழ் இனத்தையே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களை பிடித்துச் சென்ற ராணுவம் அவர்களை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொன்றது. ராணுவம் பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கதி என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. போருக்குப்பின் அமைதி ஏற்பட்டாலும் தமிழர்கள் தங்கள் வீடு, நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகளை லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது மேற்கத்திய நாடுகள் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கை மீதான போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் பக்கத்து நாடான இந்தியா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று இலங்கை ராணுவத்தின் மீதான போர்குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி கோர்ட்டு அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) விசாரணை தொடங்குகிறது. 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 10-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இத்தாலி அமைப்பு சார்பில் வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜூட் லால் பெர்னாண்டோ என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். 10 பேர் சாட்சியம் அளிக்கிறார்கள். இந்த வழக்கில் இலங்கையில் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.