பக்கங்கள்

24 டிசம்பர் 2013

சம்பந்தனுக்கு மகிந்த ஆலோசனை வழங்கினாராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு பிரிவினைவாதக் கொள்கைகளுடன் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், அரியநேந்திரன் ஆகியோரை கட்சியிலிருந்து புறந்தள்ளிவைக்குமாறு மகிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்டத் தரப்பு தகவல் ஒன்றின் மூலம் தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சபாநாயகர் ஒழுங்கு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, தமிழ்க் கூட்டமைப்புத் தலைவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக் கூறப்படுகிறது. கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட தரப்பினர் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இது அவ்வளவு நல்லதல்ல என்றும் மகிந்த ராஜபக்‌ஷ சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.இரணைமடு குளம் விவகாரதில் சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட தரப்பினர், உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டு, தமிழ்க் கூட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் எனவும் மகிந்த ராஜபக்‌ஷ எச்சரித்துள்ளார்.குறிப்பாக மாவிலாறு விவகாரத்தில் இறுதியில் நடந்தது என்ன என்பது நினைவிருக்கிறதுதானே, இதுபோன்ற நிலைமை இரணைமடு குள விவகாரத்தில் இடம்பெறாது பார்த்துக் கொள்ளுங்கள் என மகிந்த ராஜபக்‌ஷ மறைமுக எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரியவருகிறது.அத்துடன், அண்மையில் சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இவ்வாறான பிரிவினைவாதம் பேசும் தரப்பினரை கட்சியில் முன்னிலைப்படுத்துவது நல்லதல்ல எனவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தும் அல்லது பிரித்தாளும் சூழ்ச்சியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்த விஷமத்தனமான கருத்துக்களை சம்பந்தன் தலையில் போட்டதாக கூட்டமைப்பின் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தெற்கில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி,சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானின் வாக்கு வங்கியை சிதைக்கும் முயற்சியிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளமையும், மிக நீண்டகாலமாக தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.