பக்கங்கள்

02 டிசம்பர் 2012

எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்

ஈழத்தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இன அழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக சமூகம் துணை போயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில், எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே ‘தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்’ என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பரிகாரமாக சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்றும் வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்ற அமர்வின் தொடக்க நாள் நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் ஆற்றிய தொடக்க நாள் உரையின் முழுவடிவத்தை இங்கே தருகின்றோம். கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவ அரசவை உறுப்பினர்களே! கௌரவ மேலவை உறுப்பினர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சிறப்பு விருந்தினர்களே! மற்றும் சபை அமர்வு நிகழ்வுகளைக் காண வந்துள்ள ஆர்வலர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நம் சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலை வேட்கையினை அனைத்துலகமெங்கும் முரசறைந்தொலித்து, உலகப்பந்தில் தமிழீழத் தேசத்துக்கென்றொரு அடையாளத்தையே உருவாக்கி அதற்கான விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நம் மாவீரர்களை மனதிலிருத்தி இவர்களை வணங்கி எனது உரையை ஆரம்பிக்றேன். இன்று ஆரம்பமாகும் இந்த நேரடி அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு. இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் நமது மாவீர்களை உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்த நாம் மாவீரர் கனவை நனவாக்கும் வழிவகைகாண இன்றைய அமர்வில் கூடியுள்ளோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த நான்காவது அமர்வு முதற்தடவையாக இலண்டன் மாநகரில் நடைபெறுகிறது. இவ் அமர்வு இலண்டனில் நடைபெறுவது இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவது, ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்கும் பிரித்தானியாவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்த மிக நெருக்கமான தொடர்பின் பாற்பட்டு எழுகிறது. ஈழத்தமிழர் தேசத்தின் இன்றைய அரசற்ற நிலைக்கும் காலனித்துவ ஆட்சிக்காலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஈழத்தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் பிரித்தானியர்களால் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டமையும், காலனித்துவ முடிவின் போது நிர்ணயம் செய்யபட்ட நாடுகளின் எல்லைக் கோடுகளும் நமது தேசம் சிங்களத்தின் ஆதிக்கத்துக்கும் இன அழிப்புக்கும் உட்பட அடிப்படைக் காரணங்களாகின. இதனால் ஈழத்தமிழர் தேசத்தை சிங்களத்தின் இன அழிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு பிரித்தானியாவுக்கு இருக்கிறது என ஈழத்தமிழ் மக்கள் கருதுகின்றனர். இதனால் இலண்டனில் கூடும் இந்த நான்காவது அமர்வு அனைத்துலச சமூகத்தின் ஊடாக நீதிகோரும் ஈழத்தமிழர் தேசத்தின் இன்றைய முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும். இரண்டாவது, அனைத்துலக ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டதில் இலண்டன் மாநகருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நமது பெருமதிப்புகுரிய தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களை நமது போராட்டத்துக்கு வழங்கியதும் இந்த இலண்டன் மாநகரம் தான். விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகச் செயலகம் தளபதி கிட்டு தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டதும் இந்த இலண்டன் மாநகரில் தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதற்தொட்டு; இன்றுவரை பிரித்தானியாவிலிருந்து வழங்கப்படும் போராட்டத்துக்கான பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறன. இந்த வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு இலண்டனில் நடைபெறுவது முக்கியம் பெறுகிறது. இன்றைய இந்த அமர்வு இன்னொருவகையிலும் முக்கியம் பெறுகிறது. இந்த அமர்வில் நமது மதிப்புக்கும் வணக்கத்துக்குமுரிய இம்மானுவல் அடிகாளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தமது தோழமையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த அமர்வின் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருக்கிறார். அடிகளார் அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றியுடன் வரவேற்கிறேன். அடிகளாரின் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இவ்வருடம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாநகரில் கூடி சில விடயங்களில் ஒருங்கிணைந்து இயங்குவது என முடிவெடுத்துக் கொண்டமையினையும் நீங்கள் அறிவீர்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து இயங்கககூடிய விடயங்களில் தொடரந்து இணைந்து இயங்குவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிப்பாடு கொண்டுள்ளது. இதனை விட, இந்த அமர்வுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை அமைக்கப்பட்ட பின்னர் அரசவை உறுப்பினர்களும் மேற்சபை உறுப்பினர்களும் இணைந்த வகையில் கலந்து கொள்ளும் முதலாவது அமர்வாக இது அமைகிறது. இத்தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்பதோடு மேற்சபை அமைக்கப்பட்டுக் குறுகிய காலத்திலேயே இவர்கள் தமது செயற்பாடுகளைத் திறம்பட ஆற்ற ஆரம்பித்தமை கண்டு மகிழ்வடைவதோடு இவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஆரம்பமாகும் இந்த நான்காவது நேரடி அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் இறுதி நேரடி அமர்வாகவும் அமைய இருக்கிறது என்பதனையும் நான் உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆட்சிமைக் காலத்தை 3 வருடங்கள் என நிர்ணயம் செய்தமையினை நீங்கள் அறிவீர்கள். இதனால் புதிய அரசவைக்கான தேர்தல்கள் நடாத்தபட்டு, அதனூடாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட நேரடி அமர்வாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த நேரடி அமர்வு அமையும். இந்த வகையில் எதிர்வரும் மாதங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு முக்கியமான காலங்கள் ஆகும். இந்தக் காலப்பகுதிக்குள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நாம் வேகமாகவும் திறம்படவும் முன்னெடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் அனைத்தலக அரங்கில் பெருமித்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையுமாறு நாம் நமது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இங்கு பெருமித்த தாக்கம் தரும் வழிவகை எனும் போது நமது முயற்சி பலமடங்கு பெருகிப் பலன்தரக்கூடிய மார்க்கங்களைக் கண்டறிந்து செயற்படும் வழிமுறைகளைக் குறித்து நிற்கிறது. தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் அராஜகச் செயற்பாடுகளையும் உடனுக்குடன் அனைத்துலச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லுதலும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகைள மேற்கொள்ளலும் இதன்பாற்பட்டு அவசிய நடவடிக்கைகைளாகும். இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் மேலும் புரிந்து கொள்ள முயல்வோம். இவ்வருடத் தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பற்றி நீங்கள் அறிவீர்கள். இது தொடர்பில் ஐ.நா பொதுச் செயலருக்கு நான் அனுப்பி வைத்த அவசர வேண்டுகோளில் சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளேன். இதன் முதற்படியாக கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் குழுவினை உடனடியாக விரைந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியதோடு யாழ் பல்கலைக்கழக பெண்கள் தங்குமிட விடுதிக்குள் உட்புகுந்த சிறிலங்கா படையினரின் அத்துமீறல் நடத்தை குறித்து அச்சத்தினையும் ஐ.நா பொதுச் செயலருக்கு தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் மீதான சிங்கள படைகளது பாலியல் துன்புறுத்தல்களையும் ஐ.நா பொதுச் செயலருக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். இவ்வேண்டுகோளின் தொடர் நடவடிக்கையாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையக அதிகாரிகளை நான் விரைவில் சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசுவதுடன் இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்ககான பாதுகாப்புக்கு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று தேவை எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் வலியுறுத்த உள்ளேன். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த இந்த நடவடிக்கை போல தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் அரசியல் அமைப்புக்கள் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழ் தேசிய மக்கள்  முன்னணி, தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புக்கள் போராட்ட அறிவித்தல்களை விடுத்துள்ளன. இவ்வாறு களத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்கள் வெவ்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அனைத்தின் திரட்சியும் இணைந்து பெருமித்த பெறுபேறினை அனைத்துலக அரங்கில் ஏற்படுத்தும் வாய்ப்புக்களைத் தரும். இத்தகைய பெருமித்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நாம் செயற்படுவதற்கு தமிழ் அமைப்புக்கள் மத்தியில் புரிந்தணர்வுடன் செயற்படும் மனப்பாங்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் வெவ்வேறு பாத்திரங்களை நாம் புரிந்து கொண்டு, அதனை அங்கீகரித்து நாம் செயற்பட வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஏனைய அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும். நாம் நமக்குள் தோழமையுணர்வுடன் இயங்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தனது தோழமையுணர்வை வெளிப்படுத்த  இம்மானுவல் அடிகாளர் இன்றைய அமர்வில் கலந்து கொண்டுள்ளமை இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய அரசியல் அமைப்புக்களுடன் தோழமையுணர்வுடன் இயங்குகிறது. தொடர்ந்தும் அவ்வாறே இயங்கும். உதாரணமாக, இம்மாத ஆரம்பத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பங்குபற்றியிருந்தது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கியிருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில் இத்தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். இந்த மாநாட்டிற்க்கு இந்தியாவிலிருந்து வருகை தந்தோருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடாத்திய தமிழருக்கான அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இம்மநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக பிரத்தானிய தமிழர் பேரவைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பானவர்களே, நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறோம். ஈழத்தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இன அழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும். இங்கு பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே ‘தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்’ என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது. அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழைகப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும். இந்தப் பரிகாரம், இந்த நியாயம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும். நாம் இவ்வருடம் விடுத்த தேசிய மாவீர்நாள் செய்தியில் இதனை வலியுறுத்தியுள்ளேன். இன்றைய இம் அமர்வில் நாம் விவாதித்து முடிவு செய்ய வேண்டிய விடயங்கள் நமது இலக்குக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டுவதனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். ஈழத்தமிழர் தேசத்துக்குச் சாதகமான வகையில் அமையக்கூடிய முறையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு உரிய செயற்பாடுகளை நாம் கூரிய நுட்பத்துடன் மேற்கொள்ள வேண்டும். இன்றை அமர்வில் பின்வரும் விடயங்களை குறித்துக் கவனம் கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். கடந்த அமர்வில் நாம் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக விவாதித்திருந்தோம். இங்கு தமிழீழ வெளியுறவுக் கொள்கை எனும் போது அதில் இரு அடுக்குகள் உள்ளன. முதலாவது, தமிழீழத்தை அடைவதற்கான ஈழத்தமிழர் தேசத்தின் வெளியுறவுக் கொள்கை. இரண்டாவது அடுக்கு புதிதாய் உருவாகும் தமிழீழ நாட்டின் வெளியுறவுக் கொள்கை. இந்த இரண்டு அடுக்குக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. முதலாவதின் அத்திவாரத்தில் இருந்தே இரண்டாவது கட்டப்படல் நடைமுறையில் சாத்தியப்படும். இதனால் நாம் இங்கு விவாதிக்கும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்கள் தமிழீழத்தை அடவைததற்கான வெளியுறவுக் கொள்கை என்பதனை நாம் மனதில் இருத்திக்; கொள்ள வேண்டும். இந்த வெளியுறவுக் கொள்கை தமிழீழத்தின் புவிசார் அரசியல் பரிமாணத்துடன் அனைத்துலக அரசியல் ஒழுங்கையும் இணைத்து விரிவாக விவாதிப்புதன் ஊடாகவே உருவாக்கப்படல் வேண்டும். இதனால்; இவ் விடயத்தை ஆழமாக விவாதிக்க நாம் மாநாடு ஒன்றினையும் ஏற்பாடு செய்ய உள்ளோம். எமது செயற்பாடுகளை முன்னெடுப்தற்கான வழிகாட்டிப்பாதைப் பரிந்தரையினை நமது மேலவை உறுப்பினர்கள் தயாரித்துள்ளனர். நாம் செல்லும் திக்கை நாம் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த வழிகாட்டிப்பாதை முக்கியம். நாம் எவ்வளவு விரைவாக பயணிக்கிறோம் என்பது முக்கியமானதுதான். ஆனால் அதனை விடச் சரியான திசையில் பயணித்தல் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தவறான திசையில் எவ்வளவு வேகமாகப் பயணித்தாலும் பிழையான இடத்துக்கு விரைவாக போய்ச் சேருவோமயன்றி நாம் வந்தடைய இடத்தை தவற விட்டு விடுவோம். இதனால் நாம் பயணிக்கும் திசை குறித்த வழிகாட்டிப்பாதைப் பரிந்துரையினை இச்சபை ஆழமாக விவாதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விரைவில் தென் ஆபிரிக்கா சுதந்திரப் போரட்டக் காலத்தில் ஆபிரிக் தேசியக் காங்கிரஸினால் பிரகடனப்படுத்தபட்டது போன்ற சுதந்திரப் பட்டயம் (Freedom charter) ஒன்றினை பிரகனப்படுத் இருக்கிறது. கௌரவ உறுப்பினர்களே, ஈழத்தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல ஒடுக்குமறைக்கு எதிராகப் போராடும் ஏனைய தேசிய இனங்களுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த ரீதியில் அமைக்கபபட்டுள்ள ஒரு மக்கள் அரசாங்கம் என்ற ரீதியல் நாம் முன்னுதாரணமாக உள்ளோம். பல நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு புகலிட அரசாங்கத்துக்கும் நாடுகடந்த அரசாங்கத்துக்கம் இடையிலான வேறுபாடுகளைத் புரிந்து அவை குறித்து மேலும் அறிய முற்பட்டுள்ளனர். பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் தமது புலமைக் கண் கொண்டு எம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஓன்றின் ஆதரவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினையும் திபேத்திய புகலிட அரசாங்கத்தையும் ஒப்பு நோக்கி ஆய்வு ஒன்று தற்போது மேற்கொள்ளபடுகின்றமை இதற்கு ஒரு நல்ல உதாரணம். நமது மக்கள் எம்மிடம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டவர்களாக உள்ளனர். நமது மக்கள் மட்டுமல்ல உலகில் விடுதலைக்காகப் போராடும் ஏனைய மக்களும் எம்மை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளனர். இத்தனைதொரு வரலாறு;றுச் சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழம் என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பை சாத்தியமாக்கி வென்றெடுக்க ஆதாரமாக அமைந்தது என வரலாறு பதிவு செய்யும் வண்ணம் நமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற அறைகூவலை விடுத்து இந்த நான்காவது அமர்வு சிறப்புற அமைய வாழ்த்தி எனதுரையினை நிறைவு செய்கிறேன் என உருத்திரகுமாரன் தனதுரையில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்ற அமர்வு இன்று நிறைவடையவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.