பக்கங்கள்

19 டிசம்பர் 2012

நாட்டிலுள்ள ஒரே பயங்கரவாதம் அரச பயங்கரவாதம்-மனோ கணேசன்

மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியும், விடுதலை புலிகளும் இந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். தமிழ் புலிகள் வட கிழக்கில் தனி ஒரு நாட்டை உருவாக்க முனைந்தார்கள். சிங்கள ஜேவிபியினர் முழுநாட்டையும் கைப்பற்ற முனைந்தார்கள். இரு சாராருமே ஆயுதம் தூக்கியவர்கள்தான். இருசாராருமே ஆட்சியை முழுதாகவோ, பகுதியாகவோ பிடிக்க ஆயுதம் தூக்கி போராடியவர்கள்தான். புலிகள் வட கிழக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு ஆட்சியில் வைத்திருந்தைபோல், ஜேவிபியினரும் தமது போராட்டத்தின் போது தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் பிடித்து வைத்து அங்கு ஆட்சி நடத்தியவர்கள்தான். எனவே இறந்துபோன ஜேவிபி போராளிகளை தெற்கில் நினைவுகூறும்போது, புலி போராளிகளையும் வடக்கில் நினைவுகூறுவது தவறாக முடியாது. அந்த அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சிறை பிடித்து, புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது ஏற்றுகொள்ள முடியாதது. இந்த நாட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது. இதனாலேயே யாழ் பல்கலைக்கழக மாணவர் வகுப்புகளை பகிஸ்கரித்து வருகிறார்கள். இதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ´அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்´ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நமது கட்சி ஒரு ஜனாநாயக கட்சி. நாம் நாட்டு பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகார பிரிவினையைதான் வலியுறுத்துகிறோம். அதேபோல் சட்டபூர்வ தேர்தல் மூலம் பதவிக்கு வரும் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்குவதையும் நாம் ஆதரிக்கவில்லை. தேர்தல் ஒழுங்காக நடக்கிறதா, தேர்தல் முடிவுகள் ஒழுங்காக வெளியிடப்படுகின்றனவா என்பவை தொடர்பில் இந்த அரசாங்கத்தை நாம் நம்பவில்லை. ஆனால் ஆயுத போராட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது. ஆனால், ஆயுதம் தூக்கினர்கள் என்பதற்காக வடக்குக்கு ஒரு நியாயமும், தெற்குக்கு ஒரு நியாயமும் வழங்கப்படுவதை நாம் ஏற்க முடியாது. குறிப்பாக, மாண்டுபோனவர்களை நினைவு கூறுவதை தடுக்க முனைவதை நாம் ஏற்க முடியாது. இதை நாகரீக உலகமும் ஏற்காது. தெற்கு போராட்டங்களில் போது அன்றைய தெற்கு போராளிகள் தாம் பிடித்து வைத்திருந்த பகுதிகளில் அந்நாட்களில் காட்டு நீதிமன்றங்களை நடத்தினார்கள். மாடு திருடியவருக்கும், கோழி திருடியவருக்கும் அந்நாட்களில் அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் பிரசித்தமானவை. அந்த போராட்டங்களில் காட்டு துப்பாக்கிகளை தூக்கி சுட்டு விளையாடியவர்கள் இன்று அரசாங்கத்துக்குள் இருக்கிறார்கள். அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு இது நன்கு தெரியும். இந்த காட்டுதுப்பாக்கி வரலாற்றை விமல் வீரவன்சவால் மறுக்க முடியுமா? தனி நாட்டை புலிகள் கோரினார்கள் என்றால், இவர்கள் அதைவிட ஒருபடி மேலே போய் முழு நாட்டையுமே கோரினார்களே. இன்று இந்த தென்னிலங்கை போராளிகள்தான் இங்கே நினைவு கோரப்படுகிறார்கள். அதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால், வடக்கில் இல்லை. இதன் பின்னால் உள்ள காரணம், ஒன்றே ஒன்றுதான். இவர்கள் சிங்களவர்கள். அவர்கள் தமிழர்கள். ஒரே காரியத்தை செய்யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வெவ்வேறு தண்டணைகள். இதனால்தான் யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து, திருடர்களை, மிருகங்களை பிடிப்பதை போல் பிடித்து இழுத்து சென்றுள்ளார்கள். இதை உலகம் ஒருபோதும் ஏற்காது. இன்று சிறைகளில் ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்பு அல்லது பிணை வழங்குங்கள் என்று சொன்னோம். முடியாவிட்டால், ஐந்து முதல் பதினைந்து வருடங்கள் சிறை வாழ்க்கை வாழும் இவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி புனர்வாழ்வு பயிற்சி அளித்து பின்னர் அவர்களது குடும்பங்களுடன் அவர்களை சேர்த்துவிடுங்கள் என்று சொன்னோம். இதை செய்யாத இந்த அரசாங்கம், இன்று நாட்டிலே குடும்பங்களுடன் வாழ்ந்து வந்த மாணவர்களை பிடித்து வந்து புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணம் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகும். இந்த பாதுகாப்பு செயலாளர் நாளுக்கு நாள் புதுபுது அவதாரங்கள் எடுக்கிறார். நகர அபிவிருத்தி என்று சொல்லி இன்று இவர்தான் கொழும்பில் மாநகர ஆணையாளர். தற்போது இவர் புனர்வாழ்வு ஆணையாளராகவும் மாறியுள்ளார். எதிர்காலத்தில் இவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் அவதாரம் எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. புலி பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்த மாணவர்களை பிடித்து வந்துள்ளோம் என இவர் சொல்கிறார். இந்த நாட்டில் இன்று புலியும் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. தெற்கில் ஜேவிபி இருக்கிறது. பயங்கரவாதம் இல்லை. இருக்கும் ஒரே பயங்கரவாதம் அரச பயங்கரவாதம்தான். இது இன்று அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும், நீதிமன்றத்தையும் தாக்குகிறது. இந்த அரச பயங்கரவாதம்தான் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ அரசு அல்லாத பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்க போகிறது. பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யாவிட்டால், அது தீ போல பரவி அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆக்கிரமிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.