பக்கங்கள்

23 டிசம்பர் 2012

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஐ.டி.யினரால் விசாரணை! தொடரும் கெடுபிடி!!

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரனை இன்று வவுனியாவுக்கு அழைத்த சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் 3 மணிநேர விசாரணையின் பின்னர் அவரை விடுவித்துள்ளனர். இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தவை வருமாறு: 'யாழ்.பல்கலைக்கழக நிலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்று தேவைப்படுவதால் அது தொடர்பாகக் கதைப்பதற்கு வவுனியாவுக்கு என்னை வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் தொலைபேசி மூலமாக நேற்று மாலை அறிவித்திருந்தனர். இது தொடர்பில் நான் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்திவிட்டு பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸாரின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை என்னைத் தீவிரமாக பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் விசாரணை செய்தனர். இவ்விசாரணையின் பின்னர் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு அவர்கள் கூறியதை அடுத்து, நான் அங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அரச படைகளினால் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இராசகுமாரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.