பக்கங்கள்

13 டிசம்பர் 2012

மன்னார் ஆயருக்கு பக்கபலமாக இருக்குமாறு ஜயலத் ஜயவர்த்தன வேண்டுகோள்!

மன்னார் ஆயர் 
தமிழ் மக்களுக்காக இரவு, பகல் பாராது அளப்பரிய சேவையாற்றி வரும் மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் ஆயர் தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து ஜயலத் ஜயவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மௌனமாக கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிந்த தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில்  முன்நின்றவராவார். 
கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி கஷ்டங்களை எதிர்கொண்டுவரும் இந்து மக்களுக்கும் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார், ஆற்றி வருகிறார். 
யுத்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அவர் அடைக்கலமாக  இருந்தார். விசேடமாக அவரது ஆளுகையின் கீழுள்ள வன்னி மருதமடு தேவாலயத்தில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிட வசதிகளை அவர் வழங்கினார். 
இன்றைய காலகட்டத்திலிருந்த அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளின் நலன்களுக்காக மன்னார் ஆயர் இரவு, பகல் பாராது செயற்பட்டார். என்னுடன் ஆயர் பல சந்தர்ப்பங்கில் இக்கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகளுக்குச் வந்துள்ளார்  
மன்னார் ஆயர் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதியுடன் பலமுறை சந்தித்து பேசியுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது பாதுகாப்பு உயரதிகாரிகளைச் சந்தித்தும் பேச்சு நடத்தினார். 
யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையிலும் ஆயர் தமது அதிக பங்களிப்பை நல்கினார். இவ்வாறு பல சேவைகளை செய்ததினால் ஆயர் பரிகாசங்கள், சவால்கள், பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது. 
மன்னார் ஆயரிடம் பல முறை விசாரணைகள் நடத்தப்பட்டன என்பதை தனிப்பட்டமுறையில் நான் நன்கறிவேன். என்னுடன் தமிழ்க் கைதிகளை சந்திக்கச் சென்றவேளை ஆயருக்கு பல தடைகள் வந்தன. உண்மையான மனிதநேய செயற்பாட்டாளரான மன்னார் ஆயர் செய்கின்ற இந்த அளப்பரிய சேவைகளுக்காக நாம் அனைவரும் அவருக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது உணர்வு, கருத்தாகும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.