பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2012

புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்ட போராளி கைது!

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சதீஸ்வரன் (வயது 34) என்ற முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டுள்ளவராவார். கடந்த சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இவரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முன்னதாக, அப்பகுதி கிராம அதிகாரியுடன் சதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதையடுத்து மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்வதாக கூறி, கைதுசெய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டையும் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சதீஸ்வரன் ஐந்து ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர், 2000ம் ஆண்டில் அதைவிட்டு விலகியிருந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் ஓமந்தையை சென்றடைந்த அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய சரணடைந்தார். இதன்பின்னர் சிறிலங்கா படையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே விடுதலை செய்யப்பட்டார். இதன்பின்னர், முள்ளியவளையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சிறிலங்கா படையினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருவது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.