பக்கங்கள்

09 மார்ச் 2014

சிங்களத்தின் ஆதிக்கத்தில் யாழில் அரங்கேறும் வெறிநாய்களின் அராஜகங்கள்!

வடமராட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்திருக்க குடும்பஸ்தர் ஒருவர், வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவமும், கோயிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச்சென்ற மூவர் குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் வடமராட்சி – மந்திகை சிலையடிக்கு அண்மையான பகுதியில் இருவர் குடும்பஸ்தர் ஒருவரை மீன் வெட்டும் கத்திகளுடன் விரட்டிச் சென்றனர். அவர் தன்னைக் காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பியபடி ஓடினார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் இது குறித்து பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.எனினும் நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை. பொதுமக்கள் எவரும் அவரைக் காப்பாற்ற முன்வராத போதிலும், மேலும் அதிகளவிலான மக்கள் அந்த இடத்தில் கூடவே குடும்பஸ்தரை விரட்டிச் சென்றவர்கள் துரத்துவதை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து சிறு வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர். அதேவேளை, கோயிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச் சென்ற மூவர் கொண்ட குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. இதை தடுக்க முயன்ற அவரின் காதலரையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அதில் காயமடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை வடமராட்சி - முள்ளிவெளியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவதாவது: வரணி இடைக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் வல்லிபுரக் கோயிலுக்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது காதலரை சந்தித்து ஆள்நடமாட்டம் குறைந்த வீதியில் ஓரமாக நின்று இருவரும் கதைத்தவாறு நின்றனர். அந்த நேரம் ஓட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அவர்களை தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவா இங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டு பெண்ணின் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் செல்ல முற்பட்டனர்.இதை பெண்ணின் காதலன் தடுக்க முற்பட்டபோது அவரை மோசமாகத் தாக்கிவிட்டு யுவதியை ஓட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று பற்றை வளவு ஒன்றில் வைத்து கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். காதலியைத் தேடிச் சென்ற காதலன் வளவின் வேலியோரமாக மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்ததுடன் நெல்லியடிப் பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஓட்டோவின் இலக்கத்தையும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட ஓட்டோவைக் கைப்பற்றினர். இதையடுத்து சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பொலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி பல குற்றச்செயல்களுடன்தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.