பக்கங்கள்

28 மார்ச் 2014

மருந்தின்மையால் காயப்பட்டவரை சாகவிட்டோம்!

“இறுதிப் போரில் இடுப்புக் கீழே துண்டாடப்பட்ட நிலையில் எம்மிடம் வந்திருந்த 60 வயது முதியவருக்கு நாம் சிகிச்சையளிக்காமல் அவரை சாவதற்கு விட்டுவிட்டோம். எமக்கு மருத்துவ வசதிகள் இல்லை. நாம் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை.” இலங்கையில் நடந்த இறுதிப் போரின் கொடூரங்கள் குறித்து விளக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் மருத்துவர் வரதராஜா. இறுதிப் போர் நடைபெற்ற போது அந்தப் பகுதியில் மக்களுக்கு தன்னாலான மருத்துவ சேவைகளை வழங்கியவர் மருத்துவர் வரதராஜா. தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள அவர் இறுதிப்போர் இடம் பெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சனல் – 4 தொலைக் காட்சி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்போது அங்கு இடம்பெற்ற கொடூரங்கள் குறித்து விளக்கினார். “இலங்கை அரசு மிக மோசமான முறையில் மருத்துவ மனைகள் மீது செ­ல் தாக்குதல்களை நடத்தியது. மனிதாபிமான உதவிகளை எல்லாம் நிறுத்தியிருந்தது. வைத்திய சாலைகளுக்கு மருந்துப் பொருள்களை அனுப்புவதையும் அரசு நிராகரித்தது. உணவுப் பொருள்களைக் கூட அனுப்பவில்லை. குருதி, மருந்து, நோயய திர்ப்பு மருந்துகள் இல்லாமையால் போரில் காயமடைந்த பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. காயமடைந்தவர்களுக்கு அவர்களுடைய இரத்தமே திரும்பச் செலுத்தப்பட்டது. போதுமான இரத்தம் கையிருப்பில் இருக்க வில்லை. தினமும் குழந்தைகள், பெரியவர்கள் என்று இறப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. எனக்கு ஞாபகம் இருக்கின்றது. 60 வயதான முதியவர் அவரது இடுப்புக் கீழே துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். அவரைக்காப்பாற்றுவதற்கு எம்மால் எதுவும் செய்ய முடியாதிருந்தது. சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதுவும் இல்லை. அவர் சிறிது நேரம் அதிலிருந்து கத்திக் கொண்டிருந்தார். பின்னர் அப்படியே அவருடைய குரல் அடங்கி விட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். போர் முடிந்த பின்னர் நாங்கள் இராணுவ புலனாய்வாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். அப்போது அவர்களாலேயே செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, எவ்வாறு கேள்விகள் எழுப்பப்படும், நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு பயிற்சி வழங்கினார்கள். கொழும்பில் அரசு ஒழுங்கு செய்து எம்மைக் கொண்டு நடத்துவித்த செய்தியாளர் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு நாடகம்தான். போர்க் களத்திலிருந்து, மக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் நான் ஊடகங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தமையால் என் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ­வும் கோபமாக இருப்பதாக இராணுவப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் செயற்பட்டாலே எனது விடுதலை சாத்தியம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் வரதராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.