பக்கங்கள்

05 மார்ச் 2014

வீட்டுக்கு ஒரு தமிழ் பெண்ணை படையில் இணையுமாறு நிர்ப்பந்தம்!

தமிழ் பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும், ஊக்கப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்துஐயன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக காண முடிகின்றது.மக்கள் அதிகமாக ஒன்று கூடும் முக்கிய சந்திகள், சந்தைகள், கடைத்தொகுதிகள், கூட்டுறவுச்சங்கங்களிலும், மக்கள் அவசியம் தமது கரும காரியங்களையாற்ற போகும் பொதுசன நிலையங்கள், வைத்தியசாலைகள், கிராம அலுவலர் அலுவலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளிலும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியில் இணைந்து கொள்ள ஓர் வாய்ப்பு!” என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கும் குறித்த துண்டுப்பிரசுரங்களில், திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும் என்றும், வயதெல்லை 18 தொடக்கம் 24 வரை என்றும், சம்பள கொடுப்பனவு ரூபா 30,000 வழங்கப்படும் என்றும், இலவசமாக சீருடை, உணவுப்பணம், தங்குமிட வசதி, குடும்பத்தினர் அடங்கலாக மருத்துவவசதி, வாண்மைத்துவ விருத்தி பயிற்சி என்பன வழங்கப்படும் என்றும், 15 வருட கால இராணுவ சேவையின் பின்னர் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் இறுதி நாள் 2014.03.31 என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில வாரங்களாக இராணுவத்தினர் வீடு வீடாகச்சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதையும், ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவிப்பு விடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் நேற்று (04.03.2014) முத்துஐயன்கட்டு பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்குச்சென்ற இராணுவத்தினர் குடும்பப்பதிவு அட்டைகளை பலவந்தமாகப்பெற்று, “குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? அதில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் உண்டா?” என்று பரிசீலித்துள்ளதோடு, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தால் கட்டாயம் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணைக்குமாறும் நிர்ப்பந்தம் கொடுத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். இதேவேளை முள்ளியவளை பிரதேசத்தின் 59வது டிவிசன் பிரிகேடியர் தர பொறுப்பதிகாரி கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்திச்சங்கம் போன்ற சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து பேர் வீதம் பெண் பிள்ளைகளை இராணுவத்துக்கு இணைத்துத்தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.