பக்கங்கள்

05 ஜனவரி 2014

சிறுவன் துடிதுடித்து மரணம்!

கிளிநொச்சி, திருநகர் தெற்கைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து உயிரிழந்தான். அவனது சாவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 வயதுதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான வீ.நிதர்சனின் உடல் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உணவருந்தியவுடன் காலை 8.30 மணியளவில் வெளியே புறப்பட்ட சிறுவன் திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து மூர்ச்சையாகிப் போனான் என்று உறவினர்கள் தெரிவித்தனர். தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது படிப்பை நிறுத்திவிட்ட நிதர்சன், கூலி வேலைக்குச் சென்றே குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளான். குடும்பத்தின் ஒரே உழைப்பாளியான தந்தை சிறைக்குள் தள்ளப்பட்டதால் தாயையும் மூன்று சகோதரிகளையும் இந்தப் பிஞ்சு வயதிலேயே சுமக்க வேண்டிய பொறுப்பு சிறுவனின் தோள்களில் சுமத்தப்பட்டது. அவன் தச்சுவேலை செய்தே தனது சகோதரிகளையும் தாயாரையும் கவனித்து வந்துள்ளான். இப்போது அவனையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாது பரிதவித்து நிற்கின்றது அந்தக் குடும்பம். சிறுவனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான வழிவகை அறியாது தவிக்கும் தாயும் சகோதரிகளும் மகன் இறந்த செய்தியை தந்தைக்கு எப்படித் தெரிவிப்பது என்று அறியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளை போதிய அக்கறையுடன் வளர்க்காத பெற்றோர்கள் சிலரைக் கடந்த காலங்களில் தண்டித்துள்ள நீதித்துறை, இந்தச் சிறுவனை கல்வி கற்கும் வயதில் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்த இலங்கை அரசையும் அதன் அதிகாரிகளையும் தண்டிக்க முன்வருமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.