பக்கங்கள்

26 ஜனவரி 2014

ஈபிடிபி ஊடகவியலாளர் மீது படையதிகாரி தாக்குதல்!

அரச ஆதரவு தரப்பான ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் ஒருவர் நேற்று இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவரது புகைப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுமுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையினில் வலிகாமம் கிழக்கின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட அச்சுவேலி இடைக்காடு பகுதியினில் படையினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததென நம்பப்படும் கண்ணிவெடியொன்று பொதுமக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பினில் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியினில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பற்றி செய்தி அறிக்கையிடச்சென்றிருந்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் (வயது 27) என்பவரே படை அதிகாரியொருவரால் பொதுமக்கள் முன்னிலையினில் தாக்கப்பட்டுள்ளார்.தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதும் அங்கு புகைப்படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டி அவ்வதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.அத்துடன் அவரு புகைப்படக்கருவியினையும் பறிமுதல் செய்து சேதப்படுத்தியுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்களை அழித்துமுள்ளார். குறித்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் ஏற்கனவே இதே போன்று இனந்தெரியாத நபர்களினால் அண்மையினில் இரவு வேளையினில் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.