பக்கங்கள்

20 ஜனவரி 2014

ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்!

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் கணவர் சசிதரனை (தமிழீழ விடுதலைப் புலிகளின்
முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்மூதல் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. அந்த அமர்பின் மூன்றாம் நாளான இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு வாக்குமூலமளிக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நானும், எனது கணவரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அப்போது, என்னையும், பிள்ளைகளையும் தனியாக வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர், எனது கணவரை விசாரணைகளின் பின் விடுதலை செய்யவதாக தெரிவித்தனர். நானும் எனது பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். ஆனாலும், கணவர் பற்றிய விபரங்கள் அதன் பின்னர் கிடைக்கவில்லை. கடைசியாக, 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் அழைத்துச் செய்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் கூறினார். கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் அப்படித்தான் இருப்பேன்” என்று அனந்தி சசிதரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நீங்கள் உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியினை அடையாளப்படுத்த முடியுமா? என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள அனந்தி சசிதரன், “எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது மோதலின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை, அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர; அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.