பக்கங்கள்

27 ஜனவரி 2014

விக்கியை மீறி நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்!

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர். அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறி வுறுத்தினார் என்று அறிய முடிகிறது.அதனையும் மீறி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (27) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது ‘வன்னிப் பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்வதற்கு நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இதனை மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, இந்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.