பக்கங்கள்

24 ஜனவரி 2014

கமலேந்திரன் விடுதலையானால் ஆபத்து!

கொல்லப்பட்ட ரெக்சியன்
நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் ரெக்சியன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பிணையினில் விடுவிக்கப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனத்தெரிவித்துள்ளனர் ரெக்சியனின் குடும்பத்தவர்கள்.மரணமடைந்த றெக்சியனினால் மரணத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட கடிதத்தினை நீதிமன்றினில் சமர்ப்பிக்காது தம்மிடம் ஒப்படைக்க கமலேந்திரனின் ஆட்கள் அச்சுறுத்தினர்.ஆனால் அதையும் தாண்டி அக்கடிதத்தினை நீதிமன்றினில் தாம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனை தொடர்ந்து தமது வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டு வருவதாகவும் சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையினிலேயே கமலேந்திரன் பிணையினில் விடுவிக்கப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனத்தெரிவித்துள்ளனர். இதனிடையே கமலேந்திரனை அடுத்த மாதம் 6ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அதே வேளை மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ள நீதிபதி யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் இதன்போது முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். டானியல் ரெக்சியன் கொலை வழக்கு, இன்று காலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இந்தக் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரெக்சியனின் மனைவி மற்றும் கமலேந்திரன் சார்பாக சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் ஆஜராகி வாதாடினார்.அதாவது, தனது கட்சிக்காரரான கமலேந்திரன் மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கோரினார். இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்றும்,அத்துடன் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பினில் பேரவையினில் எதுவுமே பேசக்கூடாதெனவும் பணித்ததுடன் அடுத்த தவணைக்காக எதிர்வரும் ஆறாம் தேதி வரையும் யாழ்.சிறைச்சாலையினில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.