பக்கங்கள்

28 ஜனவரி 2014

"ஸ்டாலின் விரைவில் செத்துவிடுவார்"திட்டினார் அழகிரி!

திமுக தலைவர் மு கருணாநிதி தனது மூத்த மகனும் கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளருமான அழகிரி, தனது இளைய மகனும் கட்சியின் பொருளாளருமாகிய ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து தன்னிடம் பேசியதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்ததாலும்தான் அவரை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்ததாகக் கூறியிருக்கிறார். கடந்த வாரம் அழகிரி தனது தந்தையை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துவிட்டுச் சென்ற சில மணி நேரத்தில் திமுகவிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பகிரங்கமாகவும் நேரடியாகவும் கருத்து தெரிவித்திருக்கும் கருணாநிதி ”அழகிரிக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கெல்லாம் உச்சகட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார்கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவென்று பேசி, என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது,” என்றார். ”என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித்தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்,” என்றும் கருணாநிதி வலியுறுத்தினார். தவிரவும் கட்சித்தலைமை எடுக்கும் சில முடிவுகள் அவருக்கு உடன்பாடானதில்லையென்பதற்காக அதைப் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது, அழகிரியோ தொடர்ந்து அவ்வாறு பேட்டியளித்து வந்தார் என்றார் கருணாநிதி. மதுரையில் தனது ஆதரவாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அவருக்கு அதிருப்தி என்கிறார்; ஆனால் மதுரை மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி மீது தாழ்த்தப்பட்டோர் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என வினவினார் அவர். அழகிரி தனது நடத்தைகளுக்காக மன்னிப்பு கோரினால், அவர்மீதான தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துத்தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.