பக்கங்கள்

09 அக்டோபர் 2014

கூட்டுக்கட்சிகளுடன் பேதம் பார்க்கவில்லை என்கிறார் வடக்கு முதல்வர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடன் தான் பேதமின்றியே நடந்து கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழரசுக் கட்சியின் சார்பாக நான் நடந்து கொள்வதாக என்னிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில், நான் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணந்திருக்க முடியுமேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இருக்க முடியாதென்று தெரிவித்தேன்.ஆனால் அந்தக் கட்சிகளை நான் எந்தவிதமான பேதத்துடனும் நடத்தவில்லை. அவர்களுடன் மனிதாபிமானத்துடன். சகோதரத்துவத்துடன் தான் நடந்து வருகின்றேன். அவ்வாறு பேதம் காட்டி நான் நடந்து கொள்வதாக இருந்தால் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கமாட்டேன். அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு செயற்பட்டதை அவர்கள் போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள்.‘இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருப்பவர்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. நான் எவரையும் வேற்றுமையுடன் நடத்தவில்லை. எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்தவிதமான ஐயப்பாட்டையும் கொள்ளத் வேண்டியதில்லை. ஒரு சில்லறை விடயத்தை வெளியில் இருப்பவர்கள் பெரிதுபடுத்தியிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதேவேளை, இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கி முதலமைச்சராகியுள்ள, வடமாகாண முதலமைச்சர், நடுநிலை நின்று அனைவரையும் வழிநடத்திச் செயற்பட வேண்டும், ஒரு கட்சியின் சார்பாகச் செயற்படக் கூடாது என்று அவரைக் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் சார்பாக நடந்து கொள்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர், ‘இதற்கு நான் கூறுகின்ற பதிலையிட்டு நீங்கள் யாரும் கோபிக்கக் கூடாது. நான் ஈபிஆர்எல்ப் கட்சியுடனோ, டெலோவுடனோ, புளொட் கட்சியுடனோ சேர முடியாது. நான் தமிழரசுக் கட்சியின் சார்பாக இருக்கின்றேன் என தெரிவித்ததாகக் கூறினார்.முதலமைச்சருக்குப் பதிலளிக்கும் வகையில், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சிகளும் உங்களிடம் வேண்டிக் கொண்டதையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்ற இந்தக் கட்சிகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தங்களை தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியையும் வகிக்கின்றார்கள்.அரசாங்கத்துடனும், எதிர்க்கட்சிகளுடனும், வெளிநாடுகளுடனும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பேச்சுக்கள் நடத்தி வருகின்றார்கள். ஆயுதப் போரட்டத்தை மேற்கொண்டிருந்தவர்கள் என்று, நீங்கள் சுட்டிக்காட்டுவது இல்லாத ஒரு விடயத்தைப் புதிதாக உருவாக்குவதாகவே இருக்கின்றது.அத்துடன் தமிழரசுக் கட்சி உங்களை அவர்களுடன் சேருமாறு கேட்டிருக்கலாம், ஈபிஆர்எல்எப் கட்சியியோ, டெலோ மற்றும் புளொட் கட்சிகளோ உங்களைத் தங்களுடன் சேருமாறு கேட்கவுமில்லை. இந்த நிலையில் நீங்கள் குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது என அவரிடம் தெரிவித்தேன். அவருடைய பதில் எங்களுக்கு அதிருப்தி தரும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.