பக்கங்கள்

25 செப்டம்பர் 2012

தமிழ் ஊடகங்களையும் புலம்பெயர் தமிழரையும் சாடுகிறார் பிள்ளையான்!

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பட்டுள்ளார். இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா? என ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கிலேயே போட்டியிட்டதாகவும், தனக்கு 15 ஆயிரம் வாக்குகள் இன்னும் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக தான்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பேன் எனவும் கூறினார். அதன் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என தான் கவலையடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காகலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும், எதிர்காலத்தில் வெற்றிப்பயணத்தை தொடர்வோம் எனவும் பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.