பக்கங்கள்

18 செப்டம்பர் 2012

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை",ஐ.நாவிடம் முறைப்பாடு.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தின்போது ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, யாழ் ஆயர் அவர்களையும் சந்தித்து வடபகுதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யுத்தம் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தெரிவித்திருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபையின் உயரதிகாரிகளையும், யாழ் அரசாங்க அதிபரையும் முதலில் சந்தித்த ஐநா அதிகாரிகள், வடபகுதியின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக அரச அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர். இதன் பின்னர், யாழ்குடாநாட்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் அவர்கள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் என்பவற்றையும் கேட்டறிந்துள்ளனர். இதன் பின்னர் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற யாழ் ஆயருடனான சந்திப்பின்போது, யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் அவர்கள் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (பீபிசி) யுத்தம் முடிவடைந்து அமைதியேற்பட்டிருக்கின்ற போதிலும், வடபகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதிலும், அரசாங்கத்தினால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா அதிகாரிகளிடம் இந்தச் சந்திப்பின்போது யாழ் ஆயரினால் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.