பக்கங்கள்

29 செப்டம்பர் 2012

புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்: - கொழும்பு நாளேடு

ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் எழுதியதன் பின்னணியிலும் இந்த அமைப்பே இருந்ததாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்சர்லாந்து அரசாங்கத் தரப்புகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 23, 24ம் நாள்களில் இந்தச் சந்திப்புகள், இடம்பெற்றுள்ளன. வண. இமானுவல் அடிகளார் தலைமையிலான, உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு தென்னாபிரிக்க மற்றும் சுவிற்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்த ஆராயப்பட்டதாகவும், போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணையே ஒரே வழி என்று வலியுறுத்தப்பட்டதாகவும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.