பக்கங்கள்

12 செப்டம்பர் 2012

ஆனந்தபுரத்தில் பெருமளவான மனித எச்சங்கள்!

அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள காணியொன்றில் குடும்பம் ஒன்று மீளக் குடியேறச்சென்ற போது எரியூட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குவியலாக காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கூடுதலான பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் சடலங்களும் எச்சங்களும் காணப்படுவதாக அங்கு மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக மனித எச்சங்கள் காணப்படுவதால் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.