பக்கங்கள்

20 செப்டம்பர் 2012

தமிழர்களை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!

பிரித்தானியாவின் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். முதலாவது குழுவில் 60 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விமான நிலையங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால், எந்த விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த நிலையில், பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இலங்கையில் நடைபெற்ற போர் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவில் அகதிகளாக வாழ வேண்டிய தேவையில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் தமிழர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் விசா பிரிவின் அதிகாரி சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுரகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் நோக்கம் பணம் சம்பாதிப்பதே எனவும் குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.