பக்கங்கள்

13 செப்டம்பர் 2012

கொள்கைகளற்ற மகிந்த அரசில் கொள்ளைகளுக்கே முதலிடம்"விக்கிரமபாகு கருணாரட்ன.

வாக்குகளைக் கொள்ளையடித்தே மஹிந்த அரசு தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நவசமசமாஜக் கட்சி, மஹிந்த சிந்தனையில் "கொள்கை'க்கல்ல,"கொள்ளை'க்கே முதலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் ஆணை தமக்கே உள்ளது என மார்தட்டும் இந்த அரசு, வன்முறைப்பாதையில் பயணிப்பதேன் என்றும் அந்தக் கட்சி கேள்வி யெழுப்பியுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு: தற்போது ஆட்சிபீடத்திலுள்ள அரசு என்றுமே நீதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.மாறாக,அது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டே ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அரச வளங்களைப் பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றது. இவ்வாறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை உருட்டி மிரட்டி வாக்குகளைப் பெறுவது உண்மையான வெற்றியல்ல. வாக்குகளைக் கொள்ளையடித்துவிட்டு மக்கள் ஆணை தமக்கே கிடைத்துள்ளது என அரசு கூறுவது மடத்தனமாகும். அதேவேளை, பணத்தை மாத்திரமல்ல, இந்த அரசு தற்போது உறுப்பினர்களையும் கொள்ளையடிக்கின்றது. மு.கா. உறுப்பினர்களுக்கு வலைவீசியுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். மஹிந்த சிந்தனையை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டர். ஏனெனில், அதில் கொள்கை, கோட்பாடுகளுக்கு இடமில்லை. கொள்ளைகளுக்கே முதலிடம் உள்ளது. கடந்த தேர்தல்களில் பெற்ற பெறுபேறுகளை விட, இந்தமுறை அரசுக்கு வாக்கு வங்கியில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.