பக்கங்கள்

28 செப்டம்பர் 2012

கிளிநொச்சி மக்கள் ஐ.நாவுக்கு அவசர மகஜர்!

தமிழ் இனத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகை மறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளி தேசிய இன மான தமிழ் இனத்தை ஒடுக்குவதற்காக தமிழர்களின் நிலத்தையும் அரசு அபகரித்து வைத்திருக்கிறது. எனவே ஐ.நாவும் சர்வதேசமும் உடனடியாகச் செயற்பட்டு இந்த நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன் தமிழ் மக்களின் அமைதியான, சுதந்திரமான, மனித உரிமைகள் தழுவிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. செயலர் பான் கீமூனுக்குக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவசர மனு ஒன்றை நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி விக்ரோரியாவிடம் நேற்று இந்த மனு கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் உள்ள பரவிப் பாஞ்சான், மருதநகர், கிருஷ்ணபுரம், இரணைதீவு, இயக்கச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த மனுவைக் கையளித்துள்ளனர். இந்த மனுவின் பிரதி ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை 2009ஆம் ஆண்டு அரசு புலிகள் இறுதிப் போரின் பின்னர் அதி தீவிரத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலப்பறிப்பும், நில ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட முறையில் அரசால் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு முழுமையும் இந்த நடவடிக்கைகள் அரசால் மிகச் செறிவாக மேற்கொள்ளப்படுகிறது. குடிமக்களுக்குச் சொந்தமாக வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவதுடன் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளின் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்கள் 2012.09.27 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய நாம் எமது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை, கவலைகளை, கண்டனங்களை, மீளக்குடியேறுவதற்கான எமது உரிமையை இந்த மனுவில் ஊடாகத் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். சரித்திரபூர்வமாகத் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களும், அவர்களுடைய வளங்களும் அரசாலும், அரச படைகளாலும் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு வருகிறன. இந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற குடிசன எண்ணிக்கைக்குப் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் அதிகரித்த இராணுவப் படையணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தகைய படைச் செறிவு அதிகரிப்பு எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையை அச்சுறுத்துவதாக அமைவதுடன் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீட்டுக்கும் வழிகோலியுள்ளது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்கின்ற கருத்து நிலைப்பாடுகளுக்கூடாக படைத்துறைப் பரவலாக்கலையும், நில அபகரிப்பையும் அரசு நியாயப்படுத்தி வருகிறது. தமிழ்ச் சமூகத்தினதும் சர்வதேவ சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகைமறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளியவாறு தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கான நவீன தந்திரோபாயங்களுடன் தமிழ் இனத்தையும் அவர்களின் நிலத்தையும் அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. தமிழ்ச் சமூகம் நம்பிக்கையோடு ஏற்றிருக்கின்ற ஜெனீவாத் தீர்மானத்தை மதிப்பதில்லை என்ற அதிகார மமதையோடும் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான அச்சுறுத்தல்களை அதிகரித்தவாறும் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் பேணாநிலை தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்டத்தின் பின்வரும் இடங்களில் எங்களுடைய காணிகளில் மீளக்குடியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியேறுவதற்கு எமக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தும் அதேவேளை தமிழ் மக்களுடைய அமைதியானதும், சுதந்திரமானதும், மனித உரிமைகள் தழுவியதுமான வாழ்வியல் ஒன்றைக் கட்டமைப்பதற்கு சர்வதேச சமூகம் தனது சர்வதேச கடப்பாடுகளை வலுவான முறையில் செயற்படுத்துமாறு வலியுறுத்தி அந்த மனுவைத் தங்களுக்கு முன்னளிக்கின்றோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.