பக்கங்கள்

08 பிப்ரவரி 2014

பூசா முகாமுக்குள் சோதனை நடத்தினார் அமெரிக்கப் பிரதிநிதி!

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர். போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது. இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது. பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை இலங்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.