பக்கங்கள்

24 பிப்ரவரி 2014

இந்தியத் தடையை மீறி இணையத்தில் போர் தவிர்ப்பு வலயம் காணொலி!

திரையரங்குகளில் திரையிட இந்தியத் தணிக்கைச் சபை அனுமதி மறுத்ததை அடுத்து, 'போர் தவிர்ப்பு வலயம் :சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம், நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது. கெலும் மக்ரே தயாரித்த இந்த 94 நிமிட ஆவணப்படத்தை, இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடுவதற்கு இந்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்திருந்தது. சிறிலங்காவுடனான உறவுகளை பாதிக்கும் என்று காரணம் காட்டியே இந்த ஆவணப்படத்துக்கு இந்திய தணிக்கைச்சபையால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், பொதுமக்களுக்கு அசளகரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்திய தணிக்கைச்சபை கூறியிருந்தது. இந்தநிலையில், திரையரங்குகளில் காண்பிக்கத் தடைவிதிக்கப்பட்ட, இந்தியா, நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளில், இந்த ஆவணப்படத்தை இணையத்தளத்தில் கட்டணமின்றிப் பார்க்கும் வசதியை ஏற்படுத்த கெலும் மக்ரே முடிவு செய்தார். இதன்படி நேற்று முதல், இந்த ஆவணப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிறிலங்காவிலும் கட்டணமின்றிப் பார்வையிடலாம். 94 நிமிடங்களைக் கொண்ட இந்த ஆவணப்படத்தில், போரில் உயிர்தப்பியவர்களின் சாட்சியங்கள், இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட அழிவுகள், அங்கிருந்த ஐ.நா பணியாளர்களின் செவ்விகள், சிறிலங்காப் படைகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் காட்சிகள், அவை தொடர்பான, தடயவியல் நிபுணர்களின் கருத்துகள் போன்றன இடம்பெற்றுள்ளன. வட இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படத்தின் ஹிந்தி மொழியாக்கப் பதிப்பும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணப்படத்தை பார்க்க,

இங்கே அழுத்துங்கள் -
http://nofirezone.org/watch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.